“லக்கி பாஸ்கர்” திரைவிமர்சனம்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “லக்கி பாஸ்கர்”.

கதைப்படி.. மும்பையில் தனியார் வங்கியில் காசாளராக பணிபுரியும் பாஸ்கர் ( துல்கர் சல்மான் ), மனைவி சுமதி ( மீனாட்சி சௌத்ரி ), மகன் கார்த்திக் ( ரித்விக் ), அப்பா, தம்பி, தங்கையிடன் வசித்து வருகிறார். நேர்மையாக தனது குடும்பத்துக்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்துவரும் அவருக்கு, அன்றாட குடும்பம் நடத்தவே அவரது வருமானம் போதாததால், அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார்.

இந்நிலையில் வங்கியில் அவருக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக தெரியவருகிறது. பதவி உயர்வு வந்ததும் பல பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என நினைத்திருக்கையில், வேறு நபருக்கு அந்த பதவி உயர்வு கிடைக்க, பாஸ்கர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மேலாளரிடம் சண்டையிட்டு, சமாதானம் ஆகிறார். அப்போது வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்க ராம்கி வருகிறார். பின்னர் நேர்மையாக இருந்தால் எதுவும் நடக்காது என புதிதாக ஒரு வழியைத் தேர்வு செய்கிறார் பாஸ்கர்.

பாஸ்கரின் அதிரடி முடிவால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? அதிலிருந்து மீண்டு பாஸ்கர் எப்படி லக்கி பாஸ்கர் ஆனார் என்பது மீதிக்கதை…

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நடைபெற்ற மோசடிகள், அதற்கு வங்கிகள் எவ்வாறு துணை புரிந்தது, அதில் பெரும்புள்ளிகளின் பங்களிப்பு பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் அற்புதமாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் அட்லூரி.

கடன்காரர்களை சமாளிப்பது, உறவினர்களின் அவமானம், குழந்தைக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியாமல் தவிப்பது, குடும்பத்துக்காக தவறு செய்யும் போது வரும் பதட்டம் என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துல்கர் சல்மான்.

அதேபோல் மீனாட்சி சௌத்ரி, ராம்கி, சாய்குமார் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Exit mobile version