தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் அருகில் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டு நிகழ்ச்சியில் 45 நிமிடங்கள் கட்சியின் தலைவர் உரையாற்றி மாநாட்டு நிகழ்வை நிறைவு செய்தார். எந்தவொரு கட்சியையும், அரசியல் தலைவர்களையும் விமர்சனம் செய்து காலத்தை வீணடிக்க மாட்டேன் என்றவர், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் நேரடியாக பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்து தான் முதலில் பேசிய பேச்சுக்கு முரணாக பேசினார். அவரது பேச்சு தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாத பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் அல்லது தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரட்டைத் துருவ நிலைக்கு மாற்றாக, ஒரு களத்தை உருவாக்கும் முயற்சிகள் கடந்த 45 ஆண்டுகளுக்கும் அதிகமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
கடந்த 45 ஆண்டுகளில் நாவலர் நெடுஞ்செழியன், எஸ். டி. சோமசுந்தரம், நெடுமாறன், வைகோ, விஜயகாந்த் முதல் கமலஹாசன் வரை ஒரு மாற்று அரசியல் களத்தை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் அடங்கும். தேசியம், திராவிடம், அடையாள அரசியல் உள்ளிட்ட பல வகைப்பட்ட போக்குகளும் இதில் அடங்கும். இதில் அண்மைக்காலமாக திராவிடத்தை நீக்கிய அரசியல் நிலைபாடுகளை முன்னிறுத்திய அரசியல் போக்குகளே அதிகமாகத் தலையெடுத்தன. குறிப்பாக தென் இந்தியாவைக் குறி வைத்து ஒன்றிய பாசிச சக்திகள் களமாடும் இந்தக் காலகட்டத்தில் அவர்களை சமாதானப்படுத்தும் பி அணிகளாகவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ரஜினிகாந்த் முயற்சியாக இருந்தாலும், கமலஹாஸன் முயற்சியாக இருந்தாலும் ஏன் பா.ஜ.க.வின் அண்ணாமலையை முன்னிலைப்படுத்தும் இந்துத்துவ அரசியலாக இருந்தாலும் அவர்கள் தாக்குதல் இலக்கு என்னவோ திராவிடம் தான். அதாவது திமுக – அதிமுக என்பதை திராவிட அடையாளமாக்கி எதிராக களமாடினார்கள். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இதே நிலைப்பாடுகளையே எடுத்தனர். இதில் கிட்டத்தட்ட தோல்வியையே தழுவினர். இந்தச் சூழ்நிலையில் நடிகர்விஜய் அரசியல் வருகை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் பெயருக்கான விளக்க உரை, கொடி எதை உணர்த்துகிறது என்பதை விளக்கியதுடன் தமது கட்சியின் கொள்கை விளக்கத்தையும் புதுமையான முறையில் வெளியிட்டுள்ளார். இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது ஏறத்தாழ திராவிடக் கருத்தியலைத் தான் முழுமையாக எதிரொலிக்கிறார் என்றே தோன்றுகிறது. மதச் சார்பின்மை, சமூக நீதி, அரசமைப்புச் சட்டத்தைக் காத்தல், மாநில உரிமைகள், ஆளுநர் பதவிக்கு எதிர்ப்பு என எல்லாமே திராவிடக் கருத்தியலுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது. இதைத்தான் திமுக, அதிமுக பிரதிபலிக்கிறது. ஆனால் ஊழல் கட்சிகள் என்று சாடுகிறார். ஊழலை ஒழிப்பேன் என்று களமாடுவது எந்த அளவு பலனளிக்கும் என்பது தெரியவில்லை.
ஆனால் இதற்கான மொழி, வடிவம், உத்திகளைப் புதுமையாகப் பயன்படுத்துகிறார். முப்பது வயதுக்குக் குறைவானவர்களைத் தமது ஆதரவாளர்களாகக் கொண்டுள்ள விஜய், அவர்களுக்காக அவர்களைக் கவரும் வகையில் என்பதற்கு மாறாக நவீன தொடர்பு வடிவங்களைக் கையாள்கிறார். கொள்கை விளக்கங்களையும் தானே முழங்குவது என்பதற்கு மாறாக இரண்டாம் நிலை தலைவர்களை விட்டு அறிவிக்கச் செய்து தனது உரையில் அதற்கான விளக்கங்களை மட்டும் அளிக்க முயன்றுள்ளார். தனது உரையிலும் சாதாரணமாக இன்று இளைஞர்களிடம் காணப்படும் உரை மொழியையே பயன்படுத்துகிறார். தமது கொள்கைகளை விரிவாக்கி முழங்காமல் தமது ஆதரவாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் தெரிகிறது. இது இன்று புதிய தலைமுறை தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், தலைவர்கள் பயன்படுத்தும் மொழிதான். தமது ஊழியர்களைத் தமது பங்காளர்களாகப் பாவித்து ஏமாற்றிச் சுரண்டும் ஒருவகையான உத்தி இது. அவரது உடல்மொழி, அவர் மேடையைப் பயன்படுத்திய விதம் எல்லாமும் ஒரு எம்.எல்.எம் கம்பெனி நிர்வாகியையே நினைவூட்டுகிறது.
ஆனால், இதற்கான தயாரிப்பில் மிகவும் கவனமாக ஈடுபட்டுள்ளார். இது ஒரு தனிநபர் என்றில்லாமல் ஒரு குழுவாக ஆலோசித்து இன்றைய அரசியல் சூழ்நிலையில் என்ன மாதிரியான கொள்கைகளைக் கூறினால் எடுபடும். அதை எந்த அளவு வரைக்கும் அனுமதிக்கலாம் என்றெல்லாம் ஆலோசித்திருப்பதும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் புதியதாகக் களமாடிய அரசியல் கட்சிகள், கூட்டணிகளின் தோல்விகளைக் கணக்கிலெடுத்து, இனி திராவிட வெறுப்பு அரசியல் பயன்பாடு என்பதை உணர்ந்து, செயல் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அரசியலில் இது எந்த அளவு எடுபடும் என்பதும் தெரிகிறது.
வெறும் உதட்டளவில் பேசும் பேச்சுகள் களத்துக்கு உதவாது. அரசியல் என்பது அன்றாடச் செயல்பாடு. அன்றாடம் நிகழும் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்ற வேண்டும். நமது பண்பாட்டு அடையாளம், மொழி அடையாளம், மாநில உரிமைகள், மாநில நலன்கள் மீது கடும் தாக்குதல்கள் பல முனைகளில் இருந்து நடத்தப்படும் இந்தச் சூழ்நிலையில் அதனைக் கருத்தாலும், களத்திலும் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு மக்களோடு மக்களாகக் களம் காண வேண்டும். நவீன தொடர்பு சாதனங்களைச் சார்ந்திருக்கும் ஹை டெக் பரப்புரை இங்கு எடுபடாது. ரத்தமும் சதையுமாக மக்களோடு நின்று களம் காண்பது மிக முக்கியமாகும். மேலும் விஜய் வெளியிட்டுள்ள கொள்கைப் பிரகடனத்துக்கு உயிர் கொடுக்கும் ஜனநாயக அமைப்போ, கருத்தியல் செறிவு மிக்க இரண்டாம் கட்டத் தலைமையும் மாவட்ட அளவிலான செயல் வீரர்களோ இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இதனை அடையாளம் காண்பதற்கே களப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கும். ஆனால் எம்.ஜி.ஆரையும், என்.டி.ஆரையும் மனதில் நினைத்துக்கொண்டு நோகாமல் நொங்கு தின்ன ஆசைப்படுவது போல் தெரிகிறது. அதற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை. இதற்கு கண் முன்னால் உள்ள உதாரணங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சிகளின் தோல்வி ஆகும். ஆந்திர – தெலுங்கு தேச நிலைமை வேறு. அங்கு தொடர்ந்து சினிமாவில் இருந்து அரசியல் தலைவர்கள் உருவானாலும் பின்னணியில் அழுத்தமான அரசியல் காரணங்களும், சாதிய அணிச்சேர்க்கை முக்கிய இடம் பிடிக்கிறது. தமிழ்நாட்டில் இது எடுபடாது என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.
சினிமாவில் உச்சத்தில் இருக்கிறப்பவே, இன்னும் மார்க்கெட் டல்லாகாம இருக்கிறப்பவே, கமர்சியலா பல கோடி சம்பாதிக்கிற படங்கள் தொடர்ந்து புக்காகிக்கிட்டு இருக்கிறப்பவே இது போதும்னு முடிவு செஞ்சு அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்.