இந்திய சினிமாக்களின் திரைக்கதை காதலை மையமாக கொண்டே நூற்றாண்டு காலமாக எழுதப்பட்டு வருகிறது. அனைத்து வகையான காதல் கதைகளையும் திரைப்படமாக்கிய தமிழ்சினிமா இயக்குநர்கள் நாடக காதல், நவீன காதல் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார்கள். நாடக காதல் ஒரு வட்டத்திற்குள் அடைபட்டு முடங்கி போனது. நவீன காதல் கதைகள் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு நவீன கதை கருவை வாரி வழங்கி வருகிறது. அந்த வரிசையில் நவீன காதலை பேசும் காதலே காதலே திரைப்படத்தை தயாரித்திருக்கிறது ஸ்ரீவாரி பிலிம்ஸ்.
காமெடி நடிகர் யோகி பாபு கதை நாயகனாக நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தர்ம பிரபு. அந்தப் படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன் அடுத்து தயாரித்துள்ள திரைப்படம் காதலே காதலே. 2021 ஆம் ஆண்டு நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை இந்நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் மூன்றாவது தயாரிப்பாக வெளிவரவுள்ள காதலே காதலே படத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் மஹத் ராகவேந்திரா நாயகனாக நடித்துள்ளார். மஹத் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர்.
மங்காத்தா, ஜில்லா, 600028 பாகம் 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மஹத் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. எஸ். ரவிக்குமார், விடிவி கனேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர். பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே. வி ஆனந்தின் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று வந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
காதலே காதலே படம் பற்றி அறிமுக இயக்குநர் ஆர்.பிரேம்நாத் கூறும்போது, “இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகக் காதல் இருந்து வருகிறது. இன்றைய நவீன கால காதலை மிக இயல்பாகச் சொல்லும் படம் இது. ஒரு காலத்தில் பார்வையிலேயே காதல் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும் என்பார்கள். உண்மையான காதல் இன்று இருக்கிறதா? ஒரு பிரச்சினை வந்தால் அவர்கள் ஒன்றாக நிற்கிறார்களா? இல்லையா? தற்போதைய தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கண்ணோட்டம் என்ன என்பதை இந்தப் படம் பேசும் என்றார்.