தமிழ் சினிமா இசை உலகில் யூடியூப் பார்வைகள் பற்றி இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசியது பரபரப்பாகப் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. யூடியூபில் பாடல் வெளியான பின்பு அதற்கு பார்வைகளை அதிகரிக்க சிலர் பணம் கொடுத்து புரமோஷன் செய்கிறார்கள் என்றும், மேலும், ரீல்ஸ் வீடியோக்களை போடுபவர்களிடத்தில் அந்தப் பாடல்களை வைத்து ரீல்ஸ் போட வைக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பாடல்கள், எப்எம் ரேடியோக்கள் மூலம் நேயர் விருப்பமாக அதிகம் ஒலிபரப்பாகும் பாடல்கள், டீக்கடைகளில் அதிகம் ஒலிக்கும் பாடல்கள் என பல வகையில் ஒரு பாடல் குறித்த வரவேற்பு அறியப்பட்டது. ஆனால் டிஜிட்டல் வருகைக்கு பின் எண்ணிக்கை என்பது முக்கியமானதாகிவிட்டது.
100 மில்லியன் என்பதுதான் வரவேற்பு என்றாகிவிட்டது. அந்த விதத்தில் தமிழ் சினிமாவில் அதிகமான 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்துள்ளவர் அனிருத் மட்டுமே. மற்ற இசையமைப்பாளர்கள் அவருக்குப் பின்னால்தான் இருக்கிறார்கள்.
அதே சமயம் தமிழ் சினிமா பாடல்களில் யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையை யுவன் இசையமைப்பில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல் 1601 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதே சமயம் யுவன் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ பாடல் குறித்து இருவிதமான கருத்து நிலவியது. அதன்பின் அனிருத் இசையில் வெளிவந்த ‘வேட்டையன்’ படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் அதிகப் பார்வைகளுடனும், ரீல்ஸ் வீடியோக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடலாகவும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஆனால், ‘தி கோட்’ படத்தின் அதிரடிப் பாடலான ‘மட்ட’ பாடலின் லிரிக் வீடியோ 30 மில்லியன் பார்வைகளையும் வீடியோ பாடல் 32 மில்லியன் பார்வைகளையும் மட்டுமே பெற்றுள்ளது. இடையில் ஜிவி பிரகாஷின் இசையில் வந்த ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் கூட 43 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அனிருத் பாடல்களை புரமோஷன் செய்வது போல யுவன் பாடல்களை அதன் தயாரிப்பாளர்கள் புரமோஷன் செய்வதில்லை என யுவன் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். யுவனும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்றும் அவர்கள் சொல்கிறார்கள். மற்ற இசையமைப்பாளர்களின் சமூக வலைதளங்களையும், யுவனின் வலைதளத்தையும் பார்த்தாலே இது புரியும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.
யூடியூப் பார்வைகள் பெறுவதில் கூட பணமும், புரமோஷனும் முக்கிய பங்கு வகிக்கிறதா என்பது சாதாரண ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல்தான். யுடியூப் ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர், கேட்கப்பட்ட பாடல்கள் சம்பந்தமான திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுவதில்லை. என்பதே களநிலவரமாக உள்ளது.