ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு இணையாக களமிறங்கும் ரோமியோ பிக்சர்ஸ்

அஜித் குமார் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் தமிழகம், கேரளா, கர்நாடக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. தெலுங்கு சினிமாவில் முன்ணணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான காட்சிகள் அனைத்தையும் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு முன்னதாக சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்றுவெளியாகும் என்று படம் அறிவிக்கப்பட்ட போதே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அஜித்குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் அதன் பின் குட் பேட் அக்லி வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. விடாமுயற்சி படத்தின் பணிகள் இதுவரை முடிக்கப்படாததால் எப்போது வெளியீடு என்பதை அறிவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது லைகா நிறுவனம். இந்த நிலையில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான ராகுல் ‘குட் பேக் அக்லி’ படத்தின் தமிழக விநியோக உரிமையை தனது ரோமியோ பிக்சர்ஸ் பெயரில் வாங்கியுள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களில் தயாரிப்பில் பணிபுரிந்தவர் ராகுல். இவர் அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் என்பதுடன் கடைசியாக இவரது நிறுவனம் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் புதிய படங்களை வெளியிடுவதில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு இணையாக ரோமியோ பிக்சர்ஸ் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version