ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செல்வா கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
போஸ்டரை பொறுத்தவரை, கையில் சிலேட்டை வைத்துக் கொண்டு நிற்கிறார் ஆர். ஜே. பாலாஜி. அதில் ‘மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் 1999’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 90களின் இறுதியில் கதை நடக்கிறது என்பதை போஸ்டர் உணர்த்துகிறது. சிறையிலிருந்து தப்பிச் செல்வது குறித்த கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சிங்கப்பூர் சலூன்’. அடுத்து அவர் சூர்யா நடிக்கும் 45-வது படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.