விஜய் நடிக்கும் 70வது படம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தற்காலிகமாக ‘விஜய் 69’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 அன்று தொடங்கியது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதால் இந்தப்படம் தான் கடைசிப்படம் என்று சொல்லியிருக்கிறார். இப்படத்துக்குப் பின் முழுநேர அரசியலில் ஈடுபடவிருப்பதால் இனிமேல் படங்களில் நடிக்க வேண்டாம் என்பது அவருடைய முடிவு என்று சொல்கிறார்கள்.

அதேசமயம், அப்படியெல்லாம் இல்லை அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்களே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த்திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் ஒருவர், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார். அது விஜய்யின் எழுபதாவது படமாக இருக்கலாம் அல்லது அதற்கு அடுத்த படமாக இருக்கலாம் என்றும் அவர் சொல்கிறார்.

இப்போது விஜய் 69 படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் விஜய் 69 படத்துக்குப் பிறகு உடனடியாக இன்னொரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் இது உறுதி என்றொரு தகவல் வருகிறது.

இயக்குநர் அட்லீ அடுத்து, கமல்ஹாசன், சல்மான்கான் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை ஜியோ சினிமாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கலாம் என்றும் அது தமிழ்ப்படம், இந்திப்படம் என்றில்லாமல் இந்தியப் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அட்லீ இயக்கும் இந்தப்படத்தில் தான் விஜய் நடிக்கவிருக்கிறாராம்.

ஏற்கெனவே கமல்ஹாசன், சல்மான்கான் ஆகிய இரு பெரும் நாயகர்கள் இருக்கும் படத்தில் விஜய்க்கு என்ன இடம் கிடைத்துவிடும்? என்றால் இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் வருகிறாராம். சில காட்சிகளில் மட்டும் அல்லது சில காட்சிகளோடு ஒரு பாடலிலும் அவர் நடனமாடலாம் என்று சொல்கிறார்கள்.

இயக்குநர் அட்லீயுடனான நட்புக்காக அவர் இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்ற ஒப்புக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

அட்லீயுடனான விஜய்யின் நட்பு அனைவருக்கும் தெரிந்தது. அதனால் அவர் இயக்கும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது, விஜய் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தாது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

Exit mobile version