தமிழ் சினிமா தயாரிப்பு, விநியோகத்தில் அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியின் தலையீடுகள், ஆதிக்கம் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதனை விமர்ச்சித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிக்கைகள் கடந்த காலங்களில் வெளியாகியிருக்கின்றன. அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேத்தியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான எஸ்.ஏ.சங்கமித்ரா திரைப்பட துறையில் அலங்கு படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் படைப்பு ரீதியாக பாராட்டுக்களை பெற்ற படம். இருபடங்களையும் இயக்கிய எஸ்.பி. சக்திவேல் அடுத்து இயக்கும் படம் அலங்கு. இந்த படத்தில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஜீஷ் இசை அமைக்கிறார். டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ், எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரிக்கின்றனர்.
தமிழக – கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் – த்ரில்லர் படமாக அலங்கு உருவாகியிருக்கிறது என கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள்தான் இதன் திரைக்கதை. படத்தின் 95 சதவிகித காட்சிகளை அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். முற்றிலும் மாறுபட்ட திரை அனுபவத்தை இந்தப்படம் தரும்” என்றார்.
அலங்கு, என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தைச் சார்ந்ததாம். ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இந்த இன நாய்கள் இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் காலப் போக்கில் அந்த இனம் அழிந்து மருவி வேறு இனப் பெயர்களில் வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் நினைவூட்டலுக்கும் இந்தப் பெயர் மிகவும் பொருந்தியிருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு இணையாக முன்னணி நிறுவனமாக புதிய, பழைய படங்களை வெளியிட்டு வரும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் அலங்கு படத்தை முழுமையாக பார்த்திருக்கிறார். உடனடியாக தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.