நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அறிவிப்பு வெளியான போது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் இயக்குனர் நெல்சன் ஏற்கனவே வெற்றிப் படங்களை கொடுத்தவர், விஜய்க்காக கதையை மெனக்கெட்டு தயார் செய்திருப்பார், மேலும் பெரிய நிறுவனம் தயாரிக்கிறது என்பதால், படம் பிரம்மாண்டமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
அதன் பிறகு படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. அதில் வணிக வளாகத்தில் சிலர் சிக்கிக் கொண்டு தவிப்பது போலவும், அவர்களை விஜய் காப்பாற்றுவது போல் இருந்தது. இந்த காட்சியைப் பார்த்ததும் உடனே ஞாபகத்துக்கு வந்தது காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளியான “கூர்க்கா” படம் தான். அந்தப் படத்தில் வணிக வளாகத்தில் சிக்கிக் கொண்ட சிலரை கூர்க்கா வேலை பார்க்கும் யோகி பாபு மீட்பது போல் காட்சி இருக்கும். அப்போது கூர்க்கா பெரிய அளவில் பேசப்படாத நிலையில் பீஸ்ட் டீசரை பார்த்ததும் அனைவரும் கூர்க்கா பற்றித்தான் பேசினார்கள். பீஸ்ட் படத்தின் ட்ரென்டிங்கே கூர்க்கா-2 என்பதாகத்தான் இருந்தது.
சமூக வலைதளங்களில் கூர்க்கா படத்தின் காட்சிகளையும், பீஸ்ட் படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு காட்சிப்படுத்தி இருந்தனர். பிரம்மாண்டமான படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வருவதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனாலும் நெகடிவ் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.
செல்வராகவன் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு கீழ் பணிபுரியும் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளவரை கேவலமாக நடத்துகிறார். உள்துறை அமைச்சரிடம் ஒரு அதிகாரி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் பேசுகிறார். படம் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கதை நகர்கிறது. யோகி பாபு இந்தப் படத்தில் ஏன் நடித்துள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கதாநாயகியை நடனத்திற்கு மட்டுமே பயண்படுத்தியிக்கிறார்கள். அதற்கு யாரோ ஒரு துணை நடிகைக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கலாம். படத்தின் வில்லன் யாருக்குமே முகம் தெரியாத துணை நடிகர் நடித்திருக்கிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசப்படும் விஜய்க்கு வில்லனாக யாராவது பிரபலமானவர் நடித்திருக்கலாம்.
ஏற்கனவே வெளிவந்த படங்களின் காட்சிகளை ஒன்றினைத்து பீஸ்ட் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறாரா? ஏன் நெல்சனிடம் சரக்கு இல்லையா என்கிற கேள்வி அனைவருக்கும் உள்ளது. இதற்கு முன் வெளிவந்த விஜய்யின் சில படங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பீஸ்ட் படம் கூர்க்கா-2 வாகவும், யோகிபாபுக்குப் பதிலாக நடிகர் விஜய் நடித்திருக்கிறார் என பேசிக்கொள்கிறார்கள்.