இளையராஜா தொடங்கிய யுடியுப்

பின்னணி இசைக்காக மட்டும் பிரத்யேகமாக இசையமைப்பாளர் இளையராஜா தனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். பாடல்களைப் போலவே, பின்னணி இசையும் புதிய அனுபவத்தை கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பின்னணி இசைக்கான எனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது பாடல்கள் உங்களை ஆட்கொண்டதை போல, இந்த பின்னணி இசையும் உங்களின் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன். ஒவ்வொரு இசைக்குறிப்பும் ஒரு கதையை சொல்லும் இந்த இசைப் பயணத்தை ஒன்றாக தொடங்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை பாகம் 1’ பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அண்மையில் கூத்துக்கலைஞர்களின் வாழ்வியலை பேசும் ‘ஜமா’ படத்துக்கு இசையமைத்தார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version