“லாரா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு  ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது, எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி
என்றார் .

படத்தில் நடித்திருக்கும் நடிகர் மேத்யூ வர்கீஸ் பேசும்போது, முதலில் என்னைத் தயாரிப்பாளர் தான் சந்தித்தார். வழக்கம் போல யூனிபார்ம் போடும் பாத்திரங்கள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம். இதைப் பற்றிக் கேட்டபோது இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்றார். அப்போதே நான் சம்மதித்தேன், முதல் படம் தயாரிக்கும் அவரது தைரியமும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரியாகச் செய்து முடிப்பது அதைவிட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பாளர் என்று எல்லாமும் அவராகவே இருந்தார். இந்தப் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அதற்குப் பலனாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது என்றார்.

இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது, இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன. நாலைந்து நாட்களில் பின்னணி இசை சேர்ப்புப்பணியை  முடித்து விட்டேன். அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்படுத்திய படம் என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் கார்த்திகேசன் பேசும்போது, நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து  திரிந்து வாய்ப்பு கேட்டு, ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக் கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம். அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன். நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது என்றார்.

படத்தின் நாயகி அனுஸ்ரேயா ராஜன் பேசும்போது.. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நான் அறிமுகமாகி இருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக நான் காத்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு  நன்றி என்றார்.

கதாநாயகன் அசோக் குமார் பேசும்போது, நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்களுடன் இந்தப் பட விழா இங்கே தொடங்கி இருக்கிறது. இன்று என்னுடன் இருக்கும் இந்தப் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெரிய பலமாக எனக்குப் பக்க பலமாக இருக்கிறது. லாரா படத்தின் வாய்ப்பு ஆல்பர்ட் என்கிற நண்பர் மூலம் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் இந்தப் பட வாய்ப்பு வந்தது. என்னிடம் வருபவர்கள் ஒரு லோ பட்ஜெட் படம் இருக்கிறது என்றுதான் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பதை எல்லாம் நம்ப முடியாது. ஏனென்றால் கதைக்கேற்ற செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அப்படி இந்தப் படத்தில் தயாரிப்பாளர் அமைந்தார். கதைக்கேற்ற செலவுகளை முழுமையாகப் பூர்த்தி செய்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. அழுத்தமான படைப்பில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சி செய்கிறேன். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர். இதில் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள், ஆனால் அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். பிரபலமானவர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது, அந்த அளவிற்கு நடித்திருக்கிறார்கள். அதில் ஒரு புதுமை தெரிகிறது.

என்னைப் பற்றி இவன் நன்றாக ஆடுகிறான், நன்றாக நடிக்கிறான், நன்றாக ஃபைட் செய்கிறான் இவனுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் வர வேண்டும் என்று பார்க்கிறவர்கள் சொல்வார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். ஒரு நல்ல கதையை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கதாநாயகனை வைத்து அல்ல. கதையை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்கள். அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டிலை சத்யராஜ் பெரிய மனதுடன் வெளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி  அறிமுகம் செய்தார். அந்த நல்ல மனிதர்களுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போதுதான் மேலும் நல்ல படங்கள் உருவாகும். அனைவரும்  இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

இயக்குநர் மணி மூர்த்தி பேசும்போது, இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம். எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது  அவர் என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என்று நாங்கள் எல்லாம் வா டா போடா என்று பேசிக்கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். அனைவரும் கடுமையான உழைப்பைப் போட்டாலும் அதை மகிழ்ச்சியாகக் கொடுத்தார்கள். அதனால்தான் குறுகிய காலத்தில் நிறைய வேலை செய்ய முடிந்தது. அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது. சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை  சேர்க்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்தார். நான் சரியாக வேலை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பு இடங்களில் பெரிய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி என்றார்.

Exit mobile version