எல்ரெட்குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஶ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “விடுதலை-2”.
கதைப்படி… கைது செய்யப்பட்ட மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை போலீசார் காட்டப்பாதையில் அழைத்துச் செல்கின்றனர். அப்போது தன்னுடைய இளமைக்காலத்தில் தான் கம்யூனிஸ்டு தொண்டனாக உருவானதிலிருந்து, காதல், போராட்டம், இல்லற வாழ்க்கை, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக, பொதுமக்களுக்கு ஆதரவாக, கருப்புச் சட்டையும், சிவப்புத் துண்டும் போராடியவிதம் என பழைய சம்பவங்களை போலீசாரிடம் கதையாகக் கூறுகிறார். அதேபோல் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இவரது கைதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டுகின்றனர். அதேநேரத்தில் மக்கள் படையைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமாள் வாத்தியாரை, போலீசாரிடமிருந்து மீட்க திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் புறப்படுகின்றனர்.
போலீசாரின் பிடியிலிருந்து மக்கள் படையினர் பெருமாள் வாத்தியாரை மீட்டார்களா ? அதிகாரிகளின் திட்டம் நிறைவேறியதா ? பெருமாள் வாத்தியார் என்ன ஆனார் என்பது மீதிக்கதை…
பெருமாள் வாத்தியார் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, கதாப்பாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார். நடை, உடை, உடல் மொழியால் பழைய கம்யூனிஸ்ட் தலைவர்களை ஞாபகப்படுத்துகிறார். அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு எதிராக, கூலி உயர்வு கேட்டு, தொழிலாளர்களை தன்னலம் கருதாது கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றுதிரட்டி போராடுவது, சனாதனத்திற்கு எதிராக, எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட சித்தாந்தம் என பழைய சம்பவங்களை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
முதல் பாகத்தில் நாயகானாக அறியப்பட்ட சூரி, பணியின் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை கடிதம் மூலம் தனது தாய்க்கு தகவல் சொல்வது போல் படம் நகர்கிறது. பெரும்பாலான காட்சிகளில் விஜய் சேதுபதி சூரிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அவ்வப்போது அவரது குரல் திரையில் ஒலிக்கிறது.
படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை என்றாலும், கடந்தகால வரலாற்றை அறிந்துகொள்ள அனைவரும் காணவேண்டிய படம்.