“தண்டேல்” படத்தின் திரைவிமர்சனம்

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்து மொண்டோடி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்”கண்டேன்”.

கதைப்படி.. ஆந்திராவில் உள்ள மீணவ கிராமத்தில், ராஜூ ( நாக சைதன்யா ), சத்யாவும் ( சாய் பல்லவி ) இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக பழகி காதலித்து வருகின்றனர். இந்த ஊர் மீனவர்கள் குஜராத் மாநிலத்தின் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடலுக்குச் சென்றால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் ஊருக்கு திரும்புவார்கள். இந்த தொழிலில் ஆபத்துகளும் நிறைந்து இருப்பதால், ஊர் திரும்பிய ராஜூவை மீண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சத்யா வற்புறுத்தி சத்யம் வாங்குகிறார். பின்னர் சத்தியத்தை மீறி கடலுக்குச் சென்றால் காதல் அவ்வளவுதான் என்கிறார் சத்யா.

இதற்கிடையில் கோவில் திருவிழாவில், ஊருக்காகவும், தன்னோடு இருப்பவர்களுக்காகவும் முன்னாள் நிற்கும் ராஜூ தான் “தண்டேல்” ( அந்த ஊர் வழக்கப்படி தலைவர் ) அறிவிக்கப்படுகிறார். அதன்பிறகு அந்த நாள் வந்ததும் வழக்கமாக ஊர் மக்களுக்காக நண்பர்களுடன் கடலுக்கு செல்கிறார் ராஜூ. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், கடுமையான புயல் காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நிலை தடுமாறி செல்கிறது இவர்களின் படகு. அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படை இவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர்.
இதற்கிடையில் தனது பேச்சைக் கேட்காத ராஜூ மீதான கோபத்தில் இருந்த சத்யா, கருணாகரனை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். திருமண ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

பின்னர் ராஜூ உள்ளிட்ட மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்களா ? ராஜூ, சத்யா மீண்டும் சந்தித்தார்களா ? இல்லையா என்பது மீதிக்கதை..

நாக சைதன்யா தனது நடை, உடை, தோற்றம், உடல் மொழி என ஒரிஜினல் மீனவராக வாழ்ந்திருக்கிறார். அதேபோல் சாய் பல்லவியும் சந்தோஷம், சோகம், துக்கம், நடனம் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்.

ஆடுகளம் நரேன் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருணாகரன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர், மீனவ குடும்பங்களின் கண்ணீர் நிறைந்த வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தி கண் கலங்க வைத்துள்ளார். வேதனை மிகுந்த மீனவ சமூகத்தின் வாழ்க்கையை, அற்புதமான படைப்பாக கொடுத்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Exit mobile version