“ஐங்கரன்” விமர்சனம் 3.5/5

அதர்வா நடிப்பில் வெளியான “ஈட்டி” படத்தின் மூலம் முதல் படத்திலேயே சக்சஸ் இயக்குனர் என பெயரெடுத்த ரவிஅரசுவின் இரண்டாவது படம் “ஐங்கரன்”

இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜீவி பிரகாஷ், மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் நடிப்பில் இது வரை வெளிவந்த படங்களைவிட இந்தப் படம் அவருக்கு சிறந்த படமாக அமைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய கருவிகளை கண்டுபிடித்து, அதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக உரிய அலுவலகத்துக்கு சென்று தனது கண்டுபிடிப்புகளை விளக்கினால் அவரை அலட்சியப்படுத்தி அனுப்புகிறார்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இளைஞர்களின் முயற்சி வீணாக்கப் படுவதை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கோழியின் எடையை அதிகரிக்க இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், இந்த மோசடியை கதாநாயகன் வெளிப்படுத்தும் விதத்தையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

வடமாநில கொள்ளையர்கள் சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள நகைக்கடைகளில் கொள்ளையடித்து விட்டு கர்நாடகா தப்பிச் செல்லும் போது, காவல்துறை வாகனத்தைப் பார்த்ததும் கொள்ளையடித்த நகை மூட்டையை தூக்கியெறிந்து காவலர்களை சமாளிக்கிறார்கள்.
அதன் பிறகு மூட்டையை எடுக்க செல்லும் போது அது ஆழ்துளை கிணற்றிற்கு உள்ளே சென்று விடுகிறது.

அதை எடுப்பதற்காக காவல் ஆய்வாளர் துணையோடு சதித்திட்டம் தீட்டி ஒரு குழந்தையை கடத்தி குழிக்குள் விழ வைக்கிறார்கள். அந்தக் குழிக்குள் விழுந்த குழந்தையின் நிலை என்ன ? கொள்ளையர்கள் பிடிபட்டார்களா ? என்பது க்ளைமாக்ஸ். அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கதையை விறுவிறுப்பாக நகர்தியிருக்கிறார் இயக்குனர் ரவிஅரசு. சண்டை காட்சிகள் பிரமாதமாக உள்ளது. படத்திற்கு பின்னணி இசையும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகரின் படமாக இல்லாமல், இயக்குனரின் படமாக “ஐங்கரன்” வந்துள்ளது என்பதால் மகிழ்ச்சி

Exit mobile version