
சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’ என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவுக்குப் படக் குழுவினர் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள்.
அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர் N. நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசும்போது, இந்த இயக்குநரை 2023 ல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு கதையைச் சொன்னார். நீங்கள் தான் தயாரிப்பாளர் என்றார். எனக்கு உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. யோசித்துச் சொல்கிறேன் என்றேன். ஆறு மாதம் போனது. இதை என் மனைவியிடம் கூறிய போது செய்யலாம் என்றார். 2024 ஆகஸ்ட் 15 இல் படம் பூஜை போடப்பட்டது. அப்படியே படக்குழு உருவாகி இந்தப் படத்தை முடித்து விட்டோம். இயக்குநர் நல்ல திறமைசாலி, உழைப்பாளி. அவரைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் படத்தில் வசனங்கள், பாடல்கள் எல்லாம் முடிந்தவரை தமிழில் இருக்க வேண்டும் என நினைத்தோம். வேறு வழியில்லாமல்தான் தலைப்பை ’ப்ராமிஸ்’ என ஆங்கிலத்தில் வைத்தோம். இப்போது படம் முடிந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது. மக்களை நோக்கித் தேர்வு எழுதுவது போல் ஒரு மன நிலையில் இருக்கிறோம். இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இந்தப் படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்தார்கள், ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதை மறக்க முடியாது. தங்கள் சொந்தப் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.
பாடலாசிரியர் பாலா பேசும்போது,
இப்போது வருகிற படங்களில் நல்ல பாட்டு இல்லை என்கிற குறை, வருத்தம் இருக்கிறது. உண்மை என்னவென்றால் அதற்கான நல்ல பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான களங்கள் குறைந்து வருகின்றன. நல்ல வாய்ப்பு கொடுத்தால் நல்ல பாடல்கள் வரும். திரைப்படங்களில் பாடல்களை ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்கிற போக்கு இருக்கிறது. பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர் அல்ல, அவை படங்களுக்கு மைலேஜ் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘குணா’ படத்தின் பாடல் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது. அது ஓர் அடையாளமாக இருக்கிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஓர் அடையாளமாக மாறி இருக்கிறது. இப்படிப் பாடல் ஒரு படத்தைக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும். இந்தப் படத்தில் பாடல் எழுதியது நல்ல அனுபவம் என்றார்.
இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது, எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை, இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ பிரமாதமான பட்ஜெட்டோ கிடையாது. எங்களைத் தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குச் சினிமா மிகவும் பிடிக்கும். நன்றாக இருந்தால் சினிமாவைக் கொண்டாடுவார்கள். நன்றாக இல்லை என்றால் விமர்சனமும் பலமாக செய்வார்கள். நான் ஊடகத்தில் 2015 – லிருந்து 21 வரை வேலை பார்த்தேன். பிறகு ஒரு பைலட் பிலிம் எடுத்தேன். நண்பர்கள் ஆதரவாக இருந்தனர். ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்’ என்ற அந்த ஒரு மணி நேரப் படத்தை எடுத்து எங்கள் பகுதியில் எல்இடி யில் திரையிட்டேன். அதிலிருந்து நகர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன்.
வாய்ப்பு கேட்டு எங்கே போனாலும் அனுபவம் வேண்டும், அனுபவம் வேண்டும் என்று கேட்டார்கள். அந்த நிலையில் இவர் என்னை நம்பினார். அதுமட்டுமல்ல இந்தப்படம் உருவாகும் போது
என்னை ஒவ்வொரு கட்டத்திலும் கைப்பிடித்து அழைத்துச் சென்ற இந்தத் தயாரிப்பாளரை மறக்க முடியாது. இந்தப் படத்துக்கு உயிரோட்டமாக சரவண தீபனின் இசை இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதிக்குத்தான் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளோம். சுவாரஸ்யம் போய்விடும் என்று இரண்டாம் பாதியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.
இதை விளம்பரப்படுத்துவதற்கு ஹெச். வினோத்தின் உதவியைக் கேட்டோம். உதவுவதாகச் சொன்னார். அவருக்கு நன்றி. ஆனால் அவரோ ’ஜனநாயகன் ’ பிரச்சினையில் இருக்கும் போது நாங்கள் எப்படிக் கேட்பது ?அதனால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நட்டி சாருக்கு நன்றி.
நாங்கள் அதிக ஆட்கள் இல்லாமல் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து பல வேலைகளையும் செய்தோம். இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் படம் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்தது. அந்த கஷ்டமான காலத்தில் அப்போது கதாநாயகி நதியா கைகொடுத்து உதவினார். அதை மறக்க முடியாது. இப்படிப் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்றார்
இசையமைப்பாளர் சரவண தீபன் பேசும்போது, இது எனக்கு முதல் படம் முடிந்தவரை செய்திருக்கிறேன். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
நடிகர் காதல் சுகுமார் பேசும்போது , நான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைப்பற்றி இங்கே குறிப்பிட்ட போது ,
எனக்கே திடுக்கென்று இருந்தது. சினிமாவில் நான் சாதிக்கவில்லை என்றாலும் சினிமாவில் இவ்வளவு நாள் இருப்பதே ஒரு சாதனைதான். இந்த படக்குழுவினரை வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
சத்தியம் என்ற வார்த்தைக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஒரு காலத்தில் சத்தியம் செய்து விட்டால் அதைப் பெரிதாக நினைப்பார்கள். அது இப்போது மாறி வருகிறது. சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை. அவர்களைப் பார்த்து அப்போது சொல்வார்கள் ’சத்தியம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல்’ என்பார்கள்.
நான் படிக்கும்போது புத்தகத்தின் மீது சத்தியம் பண்ணச் சொல்வார்கள். தவறாகச் சத்தியம் செய்தால் படிப்பு வராது என்று பயந்தார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் குழந்தை மீது சத்தியம் பண்ணச் செல்வார்கள். இன்று சத்தியத்துக்கு யாரும் பயப்படுவதில்லை அதனால் தான் இந்த நாட்டில் இவ்வளவு வன்முறைகள், அநியாயங்கள் நடக்கின்றன. நாடு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் இயக்குநர்தான் கதாநாயகன். ஆனால் இங்கே கதாநாயகி வரவில்லை.
இங்கே ஒரு படம் ஆரம்பிக்கும் போதே கதாநாயகன், கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று படத்தின் மீது சத்தியம் வாங்க வேண்டும்.
நீண்ட நாள் கழித்துதான் இப்படிப் பார்க்கிறோம் இங்கே திரையிடப்பட்ட மூன்று பாடல்களுமே ஈர்ப்பாக உள்ளன. பாடல்களும் சரி, வரிகளும் சரி நன்றாக உள்ளன. சில இசை கொண்டாட வைக்கும், சில இசை இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். அப்படி இதயத்திற்குப் பாலமாக இருக்கும் படி இந்தப் பாடல்களும் இசையும் இருந்தது. இசையமைப்பாளர், பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ட்ரெய்லர் பார்க்கும்போது கதை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் கதாநாயகன் கதாநாயகி தலையில் அடிக்கடி அடித்துச் சத்தியம் செய்வதைப் பார்க்கும் போது ஏதோ கதையில் இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அதிக சத்தியம் செய்பவன் ஆபத்தானவன். படத்தில் செய்யும் சத்தியங்களைப் பார்க்கும்போது கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சின்ன திரைப்படங்கள் என்றாலே நல்ல கதைதான் முக்கியம். பெரிய நடிகர்களோ பெரிய செலவுகளோ இல்லாத பட்சத்தில் நல்ல கதையை நம்பித்தான் படம் எடுக்க வேண்டும். நல்ல கதை, வித்தியாசமான கதை இருந்தால் தான் அது சிறந்த படம். கமர்சியல் படம் என்பது வேறு சிறந்த படம் என்பது வேறு. வணிகத்திற்குத் தேவையான கதை, வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று இரண்டு உண்டு. ‘ப்ராமிஸ்’ திரைப்படம் வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று நினைக்கிறேன்.
மக்கள் சின்ன படங்களைப் பார்க்க வருவதற்குப் பயப்படுகிறார்கள் அதற்குக் காரணம் சில சின்ன படங்கள்தான். அனுபவம் இல்லாதவர்கள் படம் எடுக்கிறார்கள். அது பார்க்கும் படியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது. எந்தப் படம் வந்தாலும் இது ஓடும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது. அந்த அளவிற்குக் கதை உள்ளது என்றார்.
தயாரிப்பாளர் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, நான் வர்மக்கலை கற்றுக் கொள்ளும் போது எங்கள் வாத்தியார் என்னிடம் என் ஆள்காட்டி விரலில் பிளேடால் கீறி,’ இது சத்தியம் என் உயிருக்கு ஆபத்து என்று வந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்துவேன்’ என்று வெற்றிலையில் எழுதி சத்தியம் வாங்கினார். அதற்கு இன்று வரை பயந்து கொண்டிருக்கிறேன். பயன்படுத்துவதற்கும் பயம், சொல்லிக் கொடுப்பதற்கும் பயம்.
சத்தியம் என்ற வார்த்தைக்கு உள்ள பலம் பிராமிஸுக்குக் கிடையாது. அம்மா என்ற வார்த்தைக்குள்ள பலம் மம்மிக்குக் கிடையாது. ‘ப்ராமிஸ்’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக உள்ளது. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, நல்ல ஒரு திருப்தியான படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தோம். அருமையான பாடல்களைப் போட்டுக் காட்டினார்கள், பாடல்கள், காட்சிகள், எடிட்டிங் எல்லாமே நன்றாக உள்ளது என்று அனைவரும் சொன்னார்கள். ஆனாலும் படம் வெற்றி பெற வேண்டும். உண்மையாக வாழ்த்த வேண்டும் என்று தான் நாங்கள் வந்திருக்கிறோம். அதற்காகவே அவர்களை வாழ்த்துகிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். நிச்சயம் இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுப்பார். எடுத்தால் சினிமாவுக்கு லாபம், தொழிலாளர்களுக்கு லாபம். சத்தியமாகச் சொல்கிறேன் இந்த ‘ப்ராமிஸ்’ படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
விழாவில் ‘ப்ராமிஸ்’ படக்குழுவினருடன் வேலூர் பகுதியில் இருந்து திரளாக வந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.