“வித் லவ்” படத்தின் விமர்சனம்

ஜீயோன் ஃபிலிம், எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், சரவணன், ஆர் ஜே ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில், மதன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வித் லவ்”.

கதைப்படி.. சென்னையில் நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் சத்யா ( அபிஷன் ஜீவிந்த் ) தனது அக்காவின் வற்புறுத்தலால் மோனிஷாவை ( அனஸ்வரா ராஜன் ) சந்தித்து திருமணம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது இருவரும் இளமைக்கால நினைவுகளை பகிரும்போது, திருச்சியில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவருகிறது. பின்னர் சத்யா பள்ளியில் அனிஷா ( காவ்யா அனில் ) என்ற பெண்ணை காதலித்த அனுபவங்கள், இளமைக்கால நினைவுகள் பற்றி சுவாரஸ்யமாக கூறுகிறார்.

பின்னர் மோனிஷாவும் பள்ளியில் படிக்கும்போது தனது காதல் அனுபவம், பள்ளி நினைவுகள், குறும்புத்தனம் என பகிர்ந்து, இருவரும் பழைய நினைவுகளில் மூழ்குகின்றனர். இருவருமே தங்கள் காதலை சொல்லாமலேயே பிரிந்தவர்கள் என்பதால், இருவரும் பழைய காதலர்களை தேடிச்சென்று இப்போது எப்படி இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், அவர்களிடம் தங்கள் காதலை சொல்லலாம் என மோனிஷா கூற இருவரும் திருச்சி கிளம்புகிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா ? பழைய காதலர்களுடன் இணைந்தார்களா ? என்னானது என்பது மீதிக்கதை..

பள்ளிப்பருவத்தில் வகுப்பறையில் மாணவர்களின் லூட்டி, ஆசிரியர்களின் கண்டிப்பு, குடும்ப சூழ்நிலை என எதார்த்தமாக, களகளப்பாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் படம் பார்ப்பவர்களை ஏதோ ஒருவிதத்தில் கனெக்ட் செய்வதை உணர முடியும். சத்யா, மோனிஷா இருவரும் தங்களது குடும்பத்தைப் பற்றி பேசும்போது அனைவரும் அதை உணர முடியும்.

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் இருவரது நடிப்பு பிரமாதம். படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மன ஓட்டமும் தங்களது பள்ளிப்பருவத்திற்குள் இழுத்துச் சென்று பழைய நினைவுகளில் மூழ்கடிக்கிறார்கள். எந்த வயதினரும் ஏதோ ஒருவிதத்தில் கனெக்ட் ஆவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் “வித் லவ்” என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம்.

Exit mobile version