
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில், நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா ‘நீளிரா’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில், என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் ‘நீளிரா’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், நீளிரா படத்தை பார்த்தேன். போர் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கலைப் படைப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்கான படமாக இருந்தது. அதற்குரிய எல்லா எலிமெண்ட்ஸும் படத்தில் இருந்தன. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது.
பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது. படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன். படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து தொடங்கினோம். முதல் படமாக ‘மேயாத மான்’ படத்தை தயாரித்தோம். ‘நீளிரா’ திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.
‘மேயாத மான்’ படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் ‘நீளிரா’ எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர்.
இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம். பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார். அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர். அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை கபிலா வேணு பேசுகையில், நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றார்.
இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான ‘மேயாத மான்’ படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.
நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது. எனக்கு தமிழில் நிறைய ஸ்லாங் தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்லாங் ஸ்ரீலங்கன் தமிழ். தமிழை அவர்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் அந்த பேச்சு இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
‘நீளிரா’ ஒன்றரை மணி நேர படம். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். ‘சின்னர்ஸ்’ என்று ஒரு படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்தப் படத்திற்குள் அவ்வளவு லேயர்கள் இருந்தது, அரசியல் இருந்தது, நிறைய ஐடியாலஜி இருந்தது. அந்தப் படத்தைப் போல் இந்த படத்திலும் நிறைய இடங்களில் மௌனங்கள் மூலம் பேசப்பட்டு இருக்கிறது.
இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை. எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும்.
நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இயக்குநர் பொன்ராம் பேசுகையில், இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும்.
நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, ‘நீண்ட இரவு ‘ என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார். அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட் என்றார்.
எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது.
எழுத்தாளர் பிரபஞ்சன் ”இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது” என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான். நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன் என்றார்.
இயக்குநர் சோமிதரன் பேசுகையில், நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, ‘நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம். படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.
தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில் சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி என்றார்.
நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில், சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது. இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம். மலையாளம், மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.
சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன் என்றார்.