
லெஜெண்ட் சரவணன் நடிப்பில், ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பாடலாசிரியர் விவேகா பேசுகையில், இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் ‘பட்டாசு’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம் என்றார்.
பேபி இயல் பேசுகையில், இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.
படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன் என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.
லெஜண்ட் சரவணன் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக மட்டும் அல்லாமல், முழுமையான அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ‘லீடர்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். ‘லீடர்’ படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்றார்.
இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்ட இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.
முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.
ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம்.
என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ் இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.
நடிகர்கள் பற்றி பேச வேண்டும். ஷாம் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ், பாயல் ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா, விவேகா, மோகன் ராஜ் அனைவருக்கும் என் நன்றி.
இறுதியாக… லெஜெண்ட். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் ‘கருடன்’ வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம்.
“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றார்.
லெஜெண்ட் சரவணன் பேசுகையில், இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் ‘லீடர்’. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.
இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை ‘லீடர்’ உடன் கொண்டாடுங்கள்.
“கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க” என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.