தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம் “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது.
இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் தான் “O2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் விக்னேஷ் GS. பல கதைகள் எழுதினாலும், இயற்கையின் மீதான ஆர்வத்தாலும், மானுடம் மீதான அக்கறையாலும் ஆக்ஸிஜன் பின்னணியில் இந்தக் கதையினை உருவாக்கியுள்ளார். ஓ2’ கதையினை கேட்டவுடனே நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷை பாராட்டி, உடனடியாக இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தந்துள்ளார். மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் இந்தக் கதையினைக் கேட்டுவிட்டு புதுமையான களமாக இருந்ததால் உடனடியாக தயாரிப்பில் இறங்கியுள்ளது. இப்படத்தின் 70%-க்கும் மேலான காட்சிகள் பேருந்துக்கு உள்ளேயே நடப்பதாக இருக்கும். இதற்கு தத்ரூபமாக தனது கலை வடிவமைப்பின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் கலை இயக்குநர் சதீஷ் குமார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளும் மிக சவாலானதாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் தரத்தை பல படிகள் உயர்த்தும் படைப்பாக இருக்கும்.
படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் விக்னேஷ் GS பேசுகையில்…
இந்த கதையை குறுகிய காலத்தில் முடிக்க காரணம் தயாரிப்பாளர் தான். இந்த கதை வித்தியாசமான ஒன்று. அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது தயாரிப்பாளர்கள் தான். நயன்தாரா சிறப்பான நடிகை, அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் என் மேல் முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார். அவர் தான் இந்த படத்தின் ஆக்சிஜன். இந்த படம் ஒரு குழுவாக உருவாக்கப்பட்டது. இந்த படம் வலிமையான பெண்களுக்கு சமர்ப்பணம் என்றார்.
தயாரிப்பாளர் SR பிரபு பேசும்போது…
பிரியாணி படத்தின் போதே ஒளிப்பதிவாளர் தமிழ் எனக்கு தெரியும். அவர்தான் இயக்குநரை அறிமுகம் செய்தார். இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானது. ஒரு தேடல் இந்த கதையில் இருந்தது. படம் எடுக்கலாம் என முடிவெடுத்த பின் இயக்குனர் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் எனக் கேட்டார். அதற்கு நயன்தாராவும் ஒத்துகொண்டார். அவர் இதுபோன்ற கதையில் நடிக்க முடிவெடுத்தது பெரிய விஷயம். இந்த படத்தின் கதையை கேட்டபோதே கலை இயக்குனர் சதீஷ் தான் சரியாக இருப்பார் என முடிவெடுத்தோம். அவரும் நல்ல பணியை செய்து கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவரும் இயக்குநர் நண்பர் என்பதற்காக பெரிய உழைப்பை போட்டுள்ளனர். இந்த படத்தின் கதையை ஒட்டி இசையை சிறப்பாக உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர். குறைந்த நடிகர்கள் இருக்கும் இந்த கதையில், சிறப்பான ஆட்களையே தேடி தேடி போட்டுள்ளோம். இந்த படம் எங்களுக்கு திருப்திகரமாக வந்துள்ளது. இந்த படம் ஒடிடியில் வருவது நாங்கள் முன்னரே முடிவெடுத்த விஷயம். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும். படம் பார்த்து நீங்கள் ஆதரவு தர வேண்டும். என்றார்.