“TN 2026” தங்க நட்சத்திரம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

KRG கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்.. நடிகர் இளவரசு பேசியதாவது., ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்களைப் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.

இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் புரியும்.
புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.

நானும், எம். எஸ். பாஸ்கர், ராமையா மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன் இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது., இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார.

நடிகர் M S பாஸ்கர் பேசியதாவது.,
இந்த படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல முயற்சி இது. இயக்குனர் இந்த படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார். ஒரு அருமையான கதையும், வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.

இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவம். முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இளவரசு , தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இதேபோல் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் உமாபதி அவர்களுக்கும் நன்றி. அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது. உமாபதி நடிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்காக அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம். எல்லாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது., நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.

தம்பி ராமையா பேசியதாவது.,
இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும், எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல, ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம்.

இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர், இளவரசு போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.

ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.

தம்பி  ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள்.
இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து, உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது.,
இயக்குனர் உமாபதி பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.
தம்பி ராமையா மற்றும் எம்.எஸ். பாஸ்கர், இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு, சித்ரா, விஜி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.

இயக்குனர் உமாபதி ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது. எம்.எஸ். பாஸ்கர் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Exit mobile version