
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மனு ஆணந்த் இயக்கத்தில், ஆர்யா, சரத்குமார், கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன், அனகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “மிஸ்டர் எக்ஸ்”.
கதைப்படி.. சென்னையில் உளவுப்பிரிவு அதிகாரி கௌதம் ( ஆர்யா ) சட்ட விரோதமாக உண்டியல் மூலம் பணப்பரிமாற்றம் செய்பவர்களை கண்காணித்து பிடித்து வருகிறார். மருத்துவராக பணியாற்றும் கீர்த்தனாவை ( அனகா ) காதலிக்கிறார். இவர் என்ன வேலை செய்கிறார் என்பது கீர்த்தனாவுக்கு கூட தெரியாது. இதற்கிடையில் நியூக்ளியர் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள், ரா ரா அமைப்பைச் சேர்ந்த மிஸ்டர் எக்ஸ் ( சரத்குமார் ) இமயமலை அடிவாரத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்து பாதுகாத்து வருகிறார். அதனை ரஷ்ய இராணுவம் எடுத்துக்கொண்டு செல்கிறது. மிஸ்டர் எக்ஸையும் பிடித்துச் செல்கின்றனர். அவரை பாகிஸ்தான் கொண்டு செல்வதாகவும் தகவல் கிடைக்கிறது. பாகிஸ்தான் சென்றால் இந்திய ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்வார்கள் என மிஸ்டர் எக்ஸை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள்.
இதனை தடுத்து நிறுத்த உளவு அதிகாரி இந்திரா ( மஞ்சு வாரியர் ) ரகசியமாக கௌதமை ரஷ்யாவுக்கு அனுப்பி மிஸ்டர் எக்ஸையும், நியூக்ளியரையும் மீட்டு வரச்சொல்லுகிறார். கௌதம் ரஷ்யா செல்கிறார். நியூக்ளியர் ரஷ்ய இராணுவத்திடமிருந்து மீட்கப்பட்டதா ? மிஸ்டர் எக்ஸ் என்னானார் ? கௌதம், கீர்த்தனா காதல் என்னானது என்பது மீதிக்கதை…
உளவாளி காதப்பாத்திரம் எவ்வளவு சவாலானது, அவர்களின் அர்ப்பணிப்பான பணி நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஹாலிவுட் தரத்தில் சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் நாயகனுக்கு இணையாக ஸ்மார்ட்டான வில்லனையும் ( கௌதம் கார்த்திக் ) அறிமுகம் செய்திருக்கிறார்.
ஆர்யா கட்டுமஸ்தான உடலமைப்புடன் காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி, தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். நாயகனுக்கு இணையாக அமரன் கதாப்பாத்திரத்தில் கௌதம் கார்த்திக் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மஞ்சு வாரியர் தனது இயல்பான நடிப்புடன் ஆக்ஷன் காட்சியிலும் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
“மிஸ்டர் எக்ஸ்” குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.