சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று, திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன் , இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று, விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி,  ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையின் புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கிராமப் பகுதி ஒன்றில் பிரம்மாண்டமான திறந்த வெளி அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அரங்கம், வடசென்னையை அப்படியே முழுவதுமாக ரீ கிரியேட் செய்து தத்துரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த அமீர் மற்றும் சந்திராவாக நடித்த ஆண்ட்ரியாவும் கலந்து கொள்கிறார்கள்.‌

இன்னும் மூன்று மாதத்திற்குள் முழுவதுமாக நிறைவு பெறும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பிற்காக சிலம்பரசன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version