ஜீவி-2 ஓடிடி யில் வெளியாவதால் உலகளவில் அதிக பார்வையாளர்களைச் சென்றடையும். படத்தின் இயக்குனர் நம்பிக்கை

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பிராமையா, சீனுராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார். ஜீவி-2 படத்தின் இசைத்தட்டை சீமான் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் விஜே கோபிநாத் பேசும்போது, “ஜீவி முதல் பாகம் ரிலீசான அன்றே அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மறுநாளே எனக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்குவதாக முடிவாகி கொரோனா காலகட்டம் காரணமாக அது தள்ளிப்போனது. அந்தசமயத்தில். தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்தி கொடுத்த உற்சாகம் காரணமாக உருவானதுதான் ஜீவி-2 படத்தின் கதை.

முதல் பாகத்திற்கு கதை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த கதாசிரியர் பாபு தமிழ் தான் இயக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இந்த கதையை நானே 2 நாட்களில் உருவாக்கினேன். இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்து அரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அதன்பின் தான் எனக்கு மனம் நிறைவடைந்தது. இன்னும் உலக அளவில் அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்கிற மகிழ்ச்சியும் ஏற்பட்டது” என்று கூறினார்.

இந்த படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிடும் அதன் சிஇஓ சீகா பேசும்போது, “நேரடியாக படங்கள் ஓடிடியில் வெளியாவதை விட தியேட்டரில் வெளியானபின் இங்கு வந்தால் தான் எங்களுக்கு அது சக்சஸ். தமிழ் மக்களை உயர்வாக காட்டும் படங்களை வெளியிடுவது தான் எங்களது குறிக்கோள். விரைவில் எங்களது தளத்தில் ஒரு முக்கியமான பிரபலத்தை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்றையும் துவங்க இருக்கிறோம்.

ஜீவி முதல் பாகத்திற்கு ஆஹாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. அந்தவகையில் ஜீவி-2 நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவது எங்களுக்கு பெருமை தான். 160 நாடுகளில் இந்த படத்தை பார்த்து ரசிக்க முடியும். சமீபத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படமும் எங்களுக்கு கிடைத்தது ஒரு கௌரவம். இயக்குனர் சீனுராமசாமியை பொருத்தவரை எங்களது நிறுவனத்தின் தூதராகவே மாறிவிட்டார் என சொல்லும் அளவிற்கு அவரது படத்தை புரமோட் செய்து வருகிறார். படத்தில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களும் இதுபோல தங்களது பட்ங்களை புரமோட் செய்ய முன்வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button