கா, லாகின் மற்றும் ட்ராமா படங்களின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

தமிழ் திரையுலகில் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின் படங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்கவிழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் “கா” பட இயக்குநர் நாஞ்சில் பேசுகையில்…
இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.. இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஜான் மேக்ஸுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸுக்கும் நன்றி என்றார்.

“கா” பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு
பேசுகையில்… ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை. லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் 3 பக்கம் தான் வசனம். கமலின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பை தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசுகையில்… திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள் மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்ன படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் பிரேக் ஈவன் என்று தான் போய்க்கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப்படங்கள் பெரிய வெற்றியை பெறும். ஜான் மேக்ஸ் எடுத்த முதல் படம் மிகப்பெரும் வெற்றி ஆனால் அவர் ஏன் ஜெயிக்கவில்லை. அவர் இடையில் நிறைய சின்ன படங்கள் செய்தார். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். சின்ன படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப்படங்கள் உங்களுக்கு பெரிய வெற்றியை தருமென வாழ்த்துகிறேன். தேர்தலில் ஜெயித்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தான் தமிழ் சினிமா இருக்கிறது. இது மாற வேண்டும். சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும் என்றார்.

ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசுகையில்… தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது என்றார். மேலும் ட்ராமா பட நடிகை காவ்யா வெல்லு பேசுகையில்.. இது எனது முதல் படம் இந்தப்படத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட் இருக்க மாட்டார்கள், ரீடேக் போக முடியாது. ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். மதுரை பெண்ணாக நடித்திருக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசுகையில்…. சசிகலா புரடக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீம் அவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து 3 வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் என்றார். மேலும் லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசுகையில்… எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம் என்றார்.மேலும் நடிகர் வினோத் கிஷன் பேசுகையில்… லாகின் லாக்டவுன் முடிந்து ஷீட் போன படம், நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவது தான் இந்தப்படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஜேகே மற்றும் வெளியிடும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கும். பெரிய நன்றிகள் என்றார்.

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசுகையில்…
சினிமாவில் சின்னப்படம் பெரிய படம் என பிரிக்க தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என தெரியும். மைனா ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்கு பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். கா படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப்படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார் அவருக்கு இந்தப்படங்கள் பெரிய லாபத்தை தரும் என்றார்.

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசுகையில்… சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் பல தமிழ்ப்படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரடக்சன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா? நாம் ஜெயிப்போமா ? என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரடக்சன்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் ரசிகனை மகிழ்விக்கும் அனைத்து படமும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம். இந்த மூன்று படங்களை எப்படி வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button