பெங்களூரில்”கோப்ரா” திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சி உத்தியை மேற்கொண்ட நடிகர் விக்ரம்
சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான ‘கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்குகளில் வருகை தந்து காண செய்வதற்கான ‘ முதல் நாள் முதல் காட்சி உத்தி’யை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த ‘கோப்ரா’ பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர்.
பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான விழாவில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத அளவிற்கு திரண்ட ரசிகர்களிடம் சீயான் விக்ரம், ‘கோப்ரா’ படத்தை பற்றி விவரித்து பேசினார். அதன் பிறகு அவர்கள் எழுப்பிய வினாவிற்கும் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
திட்டமிட்டபடி பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த ‘கோப்ரா’ பட குழுவினர், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திற்கு பயணத்திருக்கிறார்கள்.
இதனிடையே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.