சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடும் “தக்ஸ்” படத்தின் இசை ஆல்பம்
அதிரடி ஆக்சனுடன், ரத்தமும் சதையுமாக, உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் இசை ஆல்பத்தினை, புகழ்மிக்க இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறது.
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ள ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘RRR’, ‘விக்ரம்’, ‘டான்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை விநியோகம் செய்ததோடு, ‘மும்பைகார்’ என்ற இந்திப் படத்தைத் தயாரித்துள்ள ரியா சிபு, HR Pictures பேனரின் கீழ் இந்த ஆக்சன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
‘புலி’, ‘இருமுகன்’, ‘ஏபிசிடி’, ‘சாமி ஸ்கொயர்’ போன்ற பெரிய திரைப்படங்களையும், சுமார் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களையும் விநியோகித்த சிபு தமீன்ஸின் மகள் தான் தயாரிப்பாளர் ரியா சிபு. ‘தக்ஸ்’ திரைப்படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ் காந்த், சரத் அப்பானி, அனஸ்வர ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நம்பிக்கைக்குரிய இளம் நடிகரான ஹிருது ஹாரூன் முதன்மை பாத்திரத்தில் இப்படம் மூலம், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் வெளியான ‘க்ராஷ் கோர்ஸ்’ என்ற அமேசான் நிகழ்ச்சியில் ஹிருது ஹாரூனின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது விக்ரம் மாஸி, விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படமான ‘மும்பைகார்’ படத்தில், முதன்மை கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வட இந்திய மற்றும் தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இசை மற்றும் பட விளம்பரங்களை முன்னெடுக்க, சோனி மியூசிக் நிறுவனத்துடன் ‘தக்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது. சமீபத்தில் ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் சாம் CS-ன் உணர்வுகளை கிளர்ச்சியுற வைக்கும் இசையுடன் வெளியான கதாபாத்திர க்ளிம்ப்ஸ் வீடியோ, படம் குறித்தான ஆவலை அதிகரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் டிசம்பர் 2022-ல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.