இசை மேதை பத்மஶ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் நூற்றாண்டு விழா.!
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா சென்னையில் ஞாயிறு மாலை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா சிறப்பாக செய்திருந்தார்.
சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் இந்த நூற்றாண்டின் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை என்று நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு கூறினார். கண்டசாலா அவரது இசையால் இன்னும் வாழ்கிறார். இந்திய இளைஞர்கள் அவரது வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்த விழாவில் அவரது பாடல்களைக் கேட்டதும் என் குழந்தைப் பருவ ஞாபகங்கள் வந்து விட்டன. எந்த சந்தேகமும் வேண்டாம் இந்த நூற்றாண்டின் இசை மேதை கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். பல தலைமுறையினர் அவரின் குரலுக்கு ஈர்க்கப்பட்டவர்கள்.
தினசரி காலை 4.30 மணிக்கு எழுந்த பிறகு கண்டசாலா மற்றும் எஸ்பிபி யின் பாடல்களை கேட்டு தான் நாளை தொடங்குகிறேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில்… ” மிகவும் அற்புதமான நிகழ்ச்சியை ரசித்தேன். என் வாழ்நாளில் இன்றைய நிகழ்ச்சியை நான் மறக்கமாட்டேன். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக பார்வதிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தகுதியுடைய சாதனையாளர்களை இந்த விழாவில் கௌரவப்படுத்தியதற்காக பார்வதியை பாராட்டுகிறேன். சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது இளம் தலைமுறையினர் சாதிக்க ஊக்குவிக்கவே,” என்றார்.
தாய் மொழியை கற்பது மற்றும் தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், முதலில் தாய்மொழி, பிறகு சகோதர மொழி அதன் பின்னர் மற்ற மொழிகள் என்று கூறினார். இந்தியாவில் மிகவும் பழமையான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகள் இருக்க அந்நிய நாட்டு மொழி எதற்கு. முதலாவது தாய்மொழி பின்னர் சகோதரத்துவ மொழி. இரண்டிற்கு பிறகு தான் தேவைப்பட்டால் அந்நிய மொழி. முதலில் தாய் மொழியில் பேசுங்கள், பின்னர் பிறருக்கு புரியவில்லை என்றால் அதற்கு உரிய மொழியில் பேசுங்கள்,” என்று அவர் கூறினார்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், “கலை மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில் சென்னை பெயர் பெற்றது. சென்னையில் நடத்தப்படும் கண்டசாலாவின் நூற்றாண்டு விழா நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் மூலம் கண்டசாலா தனது தடத்தை பதித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு கண்டசாலா இசையமைத்துள்ளார், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்,” என்று கூறினார். நிகழ்ச்சியில் புத்தக வெளியீடு நடைபெற்றது. மேலும் பத்ம ஸ்ரீ கலைமாமணி சுதாராணி ரகுபதி, கலைமாமணி எல் ஆர் ஈஸ்வரி, கலைமாமணி நந்தினி ரமணி, பத்ம ஸ்ரீ கலைமாமணி அவசரலா கன்னியாகுமாரி , பத்ம ஸ்ரீ மற்றும் தேசிய விருது வென்ற தோட்டா தரணி, பத்ம ஸ்ரீ கலைமாமணி சிவமணி, கலைமாமணி தாயன்பன் ஆகியோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.
சங்கீத நாடக அகாடெமி, புது தில்லி தலைவர் சந்தியா புரெச்சா, கண்டசாலா வெங்கடேஸ்வரா ராவின் பேரன் மொஹிந்தர் கண்டசாலா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வென்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.
தமது கடைசி படைப்பை தலைசிறந்ததாக கண்டசாலா வழங்கினார். அதற்காக அவர் பகவத் கீதையில் இருந்து கவனமாக 100 வசனங்களைத் தேர்ந்தெடுத்தார். கண்டசாலாவின் பகவத் கீதை இசைப் படைப்பு யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அவரது நினைவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் உலகமெங்கிலும் உள்ள
பாரம்பரிய நடனக் கலைஞர்கள் காணொளி மூலம் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த அனைத்து வகையான பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றது .
இந்த நிகழ்ச்சியில் 40 தேசிய விருது பெற்ற கலைஞர்களும், 60 மாநில விருது பெற்ற கலைஞர்களும் பங்கேற்றார்கள். இதை தவிர உலகமெங்கும் உள்ள கலைஞர்களின் பிரதிநிதித்துவமும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டசாலாவின் பாடல்களை பாடினார்கள். இதற்காக பல்வேறு இசை பள்ளிகளில் பயின்ற 200 மாணவர்களில் இருந்து சிறந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக கலா பிரதர்ஷினியை சேர்ந்த கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக்குழுவினர் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், கதகளி, ஒடிஸ்ஸி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். உலகமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதில் மூலம், பார்வதி ரவி கண்டசாலாவின் கலா பிரதர்ஷினி, 1998 முதல் இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களை உலகம் முழுவதும் பரப்பும் மற்றும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 10,000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற துணைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் பயனடைந்துள்ளனர்.
பார்வதி ரவி கலைமாமணி, நாட்டிய இளவரசி, பத்ம சாதனா, நாட்டிய மயூரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பயிற்சியாளர், நடன இயக்குநர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர் ஆவார். நான்கு சதாப்தங்களுக்கும் மேலாக கலை உலகில் வெற்றிகரமாக வலம் வரும் பார்வதி ரவி இளைஞர்களிடையே பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் முயற்சியில் அவரது அமைப்பான கலா பிரதர்ஷினி மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார்.