சிசிஎல் ( Celebrity Cricket League ) கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ! வெற்றி முனைப்புடன் சென்னை ரைனோஸ் அணி !
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றனர்.
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்றும் கங்கா பிரசாத் நிறுவனராக உள்ளார். அதுபோக சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பலமுக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 25 பிப்ரவரி அன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது. தென்னிந்தியாவில் Star Network ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாக போட்டியை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. தமிழில் விஜய் சூப்பர் சேனலில் போட்டிகள் தொடர்ந்து ஒளிப்பரப்ப படவுள்ளது. DD Sports மற்றும் ஜியோ சினிமாஸ் 20 போட்டிகளையும் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
இதுகுறித்து சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி மற்றும் சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரைக்கையாளர்களை சந்தித்தனர், அப்போது சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி பேசுகையில்…
சிசிஎல்-ல் மற்ற எந்த அணியை கேட்டாலும், சென்னை தான் எங்களுக்கு பிடித்த அணி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த அணியின் மீது அனைவருக்கும் அதிகமான அன்பு இருக்கிறது. ஐபிஎல்லிற்க்கு பிறகு சிசிஎல் தான் அதிக அளவு பிரபலமான, அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும். ஏனென்றால் நிறைய Brodcast Channel-கள் இப்போட்டியை ஒளிபரப்புவதில் ஒன்றனிணைந்துள்ளன. இந்த ஆண்டு, இந்த விளையாட்டு மேலும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. விளையாட வரும் அனைத்து நடிகர்களும் பணத்திற்காக இல்லாமல் பெரும் ஆர்வத்தினால் விருப்பத்தினால் மட்டுமே வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம் என்றார்.
நடிகர் ஆர்யா பேசுகையில்., சிசிஎல் போன்ற ஒரு போட்டியை ஒருங்கிணைத்து நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஆர்வம் குறையாமல் அதை நடத்தி வருகிறார் விஷ்ணு. அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைந்து, அதை புத்துணர்ச்சியோடு நடத்தி வருகிறார். எங்கள் அணியை பொறுத்தவரை அனைவரும் நட்போடு இணைந்து விளையாடுகிறோம். நாங்கள் விளையாட்டின் போது சினிமாவை ஒதுக்கி வைத்து, முழுமூச்சாக விளையாட்டை மட்டுமே நோக்கமாக கொண்டு விளையாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் விளையாட்டு முடிந்து, நாங்கள் எங்களது தனிப்பட்ட வாழ்கைக்கு திரும்பினாலும், அடுத்த வருடம் விளையாட்டு துவங்கும் போது, விட்ட இடத்தில் இருந்து தொடருவோம் மிகவும் உற்சாகமாகிவிடுவோம். இது தான் இதன் சிறப்பம்சமே… இது ஒரு ஆரோக்கியமான, அதே நேரத்தில் மகிழ்ச்சி நிறைந்த விளையாட்டு. இதில் பங்குகொள்வது மகிழ்ச்சி.
நடிகர் பரத் பேசுகையில்..,சிசிஎல் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும், தொடர்ந்து இயங்கி கொண்டே வருகிறது, அதற்கு விஷ்ணுவிற்கு தான் நன்றி கூற வேண்டும். இந்த வருடம் விளையாட்டு இன்னும் பிரம்மாண்டமாகி இருக்கிறது. சிசிஎல் என்பது, அனைத்து மொழி நடிகர்களையும் சந்தித்து நட்புடன் பழகுவதற்கான ஒரு வாய்ப்பு. நட்போடு இருந்தாலும், இந்த வருடம் கப் எடுப்பதில், நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். கண்டிப்பாக வெல்வோம்.
நடிகர் சாந்தனு பேசுகையில்.., சென்னை ரைனோஸில் விளையாடுவது வெற்றி, தோல்வியை கடந்து ஒரு மகிழ்ச்சியை பேரின்பத்தை கொடுக்கிறது. மீண்டும் நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. விஷ்ணு, ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதற்காக அவருக்கு நன்றி. இந்த முறை கப் எடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம். எங்கள் உடன் இணைந்து பயணிக்கும் எங்கள் குழுவிற்கு நன்றி என்றார்.