சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில்.. “ஹச்.எம்.எம்” படத்தின் திரைவிமர்சனம்

நள்ளிரவு நேரத்தில் தனியாக இருக்கும் இளம்பெண், அந்த வீட்டில் தனியாக இருக்கும் இன்னொரு பெண்ணைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறும் நேரத்தில், அந்த இடத்துக்கே வந்து முகமூடி அணிந்த ஒருவர், வாழ்த்து சொல்லிவிட்டு புறப்பட்ட பெண்ணை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்கிறார். அடுத்ததாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை குறி வைக்கிறார். அவள் தன்னைக் கொல்ல வரும் நபரிடமிருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள்.

இவ்வாறான கதையில் அந்தப் பெண் தப்பித்தாரா ? அல்லது அவளது பிறந்தநாளில் இறந்து விடுகிறாளா ? கொலையாளி யார்? அந்த பெண்களை கொலை செய்ய காரணம் என்ன ? என்று  பல கேள்விகளை உருவாக்குகிறது. அதற்கு படத்தின் பின்பாதியில் விடை தருகிறது இயக்குநர் நரசிம்மன் பக்கிரிசாமியின் திரைக்கதை…

படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிற நரசிம்மன் பக்கிரிசாமியே கதை நாயகனாய் களமிறங்கியிருக்கிறார். சட்டவிரோதமாக செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கிற விஞ்ஞானி பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். தன் ஆராய்ச்சி முடிவுகளை களவாடிய துரோகிகளை களையெடுக்கும்போது நடிப்பில் கணிசமான மிரட்டல் எட்டிப் பார்க்கிறது.

இருவேறு தோற்றம் தருகிறார் கதைநாயகி சுமீரா. முகமூடி மனிதனை பார்த்து மிரளும்போது பொருத்தமான முகபாவம் காட்டியிருக்கும் அவர், உயிர் தப்பிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் துடிப்பாக வெளிப்படுகிறார். நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் வில்லத்தனத்தில் கவனம் ஈர்க்கிறது அவரது கொஞ்சலும் மிஞ்சலுமான நடிப்பு.

சுமீராவின் சிநேகிதியாக வருகிற ஷர்மி, ஷர்மியின் காதலர், விஞ்ஞானியின் நண்பராக வருகிறவர் என மற்றவர்களின் பங்களிப்பு ஊறுகாய் அளவுக்கே தேவைப்பட அதை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

புரூஸ் அமைத்திருக்கும் பின்னணி இசை, ஊட்டியின் அழகு காட்சிகளுக்கு பலம். ‘ஹக் மீ மோர், ஹக் மீ மோர்’ என இதமான இசைப் பின்னணியில் ஒலிக்கும் வரிகளைத் தவிர படத்தில் பாடல்கள் ஏதுமில்லை. பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் சாதாரணமாக எடுக்கப்பட்டிருப்பது உட்பட சிலபல குறைகள் படத்தின் பலவீனம்.

மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என மிகச்சிலரின் நடிப்பில், எளிமையான பட்ஜெட்டில் ‘ஹக் மீ மோர்’ தந்திருக்கும் இயக்குநர், கதைக்கான பட்ஜெட் கிடைக்கிற பட்சத்தில் அடுத்தடுத்த படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும்படி உருவாக்குவார் என்று நம்புவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button