நடிகர் பிரசாந்த் பிறந்தநாளில்.. “ரஞ்சன்” படத்தின் டீசர் வெளியீடு !

நடிகர் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான “ரஞ்ஜன்” படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.
இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார். பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.

விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா, SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், ஸ்ரீகணேஷ், கணேஷ் K பாபு வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது, பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் சரண் பேசியதாவது,
பிரஷாந்த் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று, ஏன்னா இது பிரஷாந்தை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம். இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும்  பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது, பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம், ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம். அப்போது தான் தியாகராஜன் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது, இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது. உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள் என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது, எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் தான். ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் விஷால் பேசியதாவது, நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம், இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன். திருடா திருடா, செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம். சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.

இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகை தேவயானி பேசியதாவது,
ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள். கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.

அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது. அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்றார்.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது, எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம். முதலில் ஒரு சிறந்த மனிதர், ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள். ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.

பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது நடந்திருக்காது. தியாகராஜன் நீங்கள் ஒரு உங்கள் மகனுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும் என்றார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது, தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.
முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி. அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கா நடிப்பது மகிழ்ச்சி, ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி. இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி, கண்மணி, புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.

மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி, ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார். பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும், மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு, பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.

நடிகர் பிரஷாந்த் பேசியதாவது,
இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள். இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம். எங்களுக்கு இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு இயக்குநராகவும், நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button