
ஆர். போத்தி ராஜ் தயாரிப்பில், அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா உள்ளிட்டோர் நடிப்பில், ஆர். வெங்கட் ரமணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “முதற்கனல்”.
கதைப்படி.. காஞ்சிபுரத்தில் வசிக்கும் சங்கர் ( ராமசாமி ) தனது மகன் சூர்யாவை அழைத்துக்கொண்டு தான் படித்த கிராமத்திற்கு செல்கிறார். அந்த இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் இளமைக்கால பசுமையான நினைவுகளை ரசித்தவாறு தனது நண்பர்களைப் பற்றி விவரிக்கிறார். தன்னோடு படித்த செல்வி கணவரை இழந்து மகனோடு வசித்து வருகிறார். அங்கு தந்தையும், மகனும் தங்குகிறார்கள். சங்கர் மகன் மீது வைத்துள்ள பாசத்தைப் பார்த்து, பாண்டி தனது தந்தை இல்லையே என தந்தை பாசத்திற்காக ஏங்குகிறான். பின்னர் சூர்யாவிற்கு அந்த ஊர் பிடித்துப்போக, சூர்யாவும், பாண்டியும் நெருங்கிய நண்பர்களாகி சுற்றித்திரிகின்றனர்.
ஒருநாள் பாண்டி தனது உள்ளூர் நண்பர்களுடன் சிகரெட் புகைக்கிறான். சூர்யா அதனைத் தட்டிக்கேட்க, அவனை சமாதானப்படுத்தி அவனையும் சிகரெட் புகைக்க பழக்கப்படுத்துகின்றனர். பின்னர் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை சமாச்சாரங்களையும் கற்றுக் கொள்கிறான் சூர்யா. அதன்பிறகு அவரது தந்தையிடன் ஊர் திரும்புகிறான். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று ஆசிரியர் பாராட்டுக்களை பெற்று மருத்துவராகும் கனவோடு இருந்த சூர்யா, கஞ்சா இல்லாமல் வாழ முடியாத நிலைக்கு ஆளாகிறான். பெற்றோர் கண்டித்ததால், ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வருகிறான். அதேபோல் பாண்டியும் வீட்டைவிட்டு வருகிறான். இருவரும் சந்தித்து சென்னை செல்கின்றனர்.
போதை பழக்கத்திற்கு அடிமையாகி திசைமாறிய இளைஞர்கள், மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்தார்களா ? சூர்யாவின் மருத்துவர் கனவு நிறைவேறியதா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..
கூடா நட்பு கேடாய் முடியும் என்கிற பழமொழிக்கேற்ப, நண்பர்களுடன் விளையாட்டாக கற்றுக்கொண்ட தீய பழக்கங்களை விட முடியாமல், குடும்பம், படிப்பு, கனவு என அனைத்தையும் இழந்து சீரழியும் இளைஞர்களின் வாழ்கையை ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்து நிகழ்காலத்தில் நடைபெறும் சம்பவங்களை கண்முன்னே நிறுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள். எதிர்கால சந்ததியினருக்கும் இந்தப்படம் ஒரு பாடமாக அமையும்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.