“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் விமர்சனம்

2M சினிமாஸ், D பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், கே.வி. சபரீஸ், தயாள் பத்மநாபன் ஆகியோர் தயாரிப்பில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா, மாறன், சரவணன், லிசி ஆண்டனி, அருவி மோகன், கன்யா பாரதி, சுப்பிரமணிய சிவா, கவிதா பாரதி உள்ளிட்டோர் நடிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “லெட்சுமி காந்தன் கொலை வழக்கு”.
கதைப்படி.. நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் வேல்முருகன் ( அருவி மதன் ) நிற்க, நீதிபதி ( கன்யா பாரதி ) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்க குழப்பம் அடைகிறார். பின்னர் கைதி ஒருவர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை படிக்கிறார். கதை 1970 களில் தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அறிவுமதி ( வெற்றி ) படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கிறார். அவரது அம்மா சூடாமணி ( லிசி ஆண்டனி ) வேலை கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார். தாய் கஷ்டப்படுவதால், குடும்ப சுமையை போக்க நண்பர் மூர்த்தியுடன் ( மாறன் ) சேர்ந்து சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார் அறிவுமதி. குடும்ப வறுமை காரணமாக அந்த ஊரின் மிராசுதார் லெட்சுமி காந்தன் ரெட்டியாரிடம் ( கவிதா பாரதி ) வட்டிக்கு பணம் வாங்குகிறார் அவரது அம்மா. இதற்கிடையில் மாமன் மகள் மல்லிகாவை ( பிரிகிடா சகா ) காதலித்து திருமணம் செய்கிறார். குழந்தையும் பிறக்கிறது. இனிமேல் திருட்டு தொழில் செய்ய வேண்டாம் என மனைவி சொல்லவும், திருந்தி வாழ முடிவெடுக்கிறார் அறிவு.

குடும்ப வறுமை, ரெட்டியாரிடம் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழலாம் என, மல்லிகா மீண்டும் திருட்டுக்கு போகுமாறு வற்புறுத்தவே, ரெட்டியார் வீட்டிற்கு திருட செல்கிறார் அறிவு. எதிர்பாராத விதமாக அங்கு கொலை சம்பவம் அரங்கேறுகிறது. பின்னர் அறிவு குற்றவாளி கூண்டில் தண்டனையை ஒத்துக்கொண்டதால் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் தூக்கிலிடப் படுவதற்கு முன், சிறை அதிகாரி சிவானந்தன் ( ரங்கராஜ் பாண்டே ) மரண தண்டனைக்கான அரசாணையை வாசிக்கிறார். அப்போது தூக்கு தண்டனையும் ஒருவிதமான கொலைதான். தனிமனிதன் வாழும் உரிமையை பறிக்கும் செயல். அரசின் நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என வாதிடுகிறார். சிறை அதிகாரி சிவானந்தன் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறைகளை விளக்கிறார்.
நீதிமன்ற உத்தரவின் படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா ? அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை..

ஜனநாயக நாட்டில் மரண தண்டனை தேவையில்லை, ஆயுள் தண்டனை போதுமானது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர்.
நாயகன் வெற்றி தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். சிறை அதிகாரியாக ரங்கராஜ் பாண்டே கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் லிசி ஆண்டனி, மாறன், பிரிகிடா சகா உள்ளிட்டோரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



