
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ ஐ ம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ‘அருகே அருகே’ ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார்.
ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படம், ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் Wayfarer Films தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம், துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சஜீல் பாபா, இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
‘அருகே அருகே..’ எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இப்படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியான இந்த ட்ரெய்லர் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
அற்புதமான காட்சிகள், பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், விறுவிறுப்பான சேசிங் காட்சிகள் என படத்தின் ட்ரெய்லர் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையில் ஒரு ஸ்டைலான ஃபேண்டஸி திரில்லர் படமாக இது அமையும் என்றும் உறுதியளிக்கப்படுகிறது. இதில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலான மற்றும் மாஸான தோற்றத்தில் தோன்றுகிறார். இது ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள ‘ஐ அம் கேம்’ மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. இப்படத்தின் ஸ்டைலான போஸ்டர்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமாக உருவாகும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட்டிலான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.