ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள “விஜயானந்த்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா
உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளில் வெளியாகிறது.
வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுய சரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்.. முதல்வர் பசவராஜ் பொம்மையா பேசியதாவது..
நான் விஜயை 1985-ல் சந்தித்தேன். ஒரு சாகசகாரராக தான் அவர் எனக்கு தெரிந்தார். எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்க கூடியவர். அவர் இதுவரை நடத்திய அனைத்து தொழில்களுமே லாபகரமான ஒன்றாக இருந்து இருக்கிறது. முடியாததை முடிப்பது தான் அவரது பாணி. அவர் லோக்சபா எம் பி ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமை தான் அவரது பலம். அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லா துறைகளிலும் பலத்தை கொடுத்து இருக்கிறது. அவர் எதை தொட்டாலும் வெற்றி தான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர் பேசியதாவது..,
நடிகர் புனித் ராஜ் குமார் மரணம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அவரை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். எனது 73 வருட வாழ்கையில் வாழ்கை எவ்வளவு அழகானது, ஆழமானது ஆச்சர்யமானது என்பதை கற்று கொண்டேன். இளைய தலைமுறைக்கு நான் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் தயவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய நேரம் இருந்து இருந்தால், நான் இன்னும் நிறைய விஷயங்களை செய்து இருப்பேன். அதனால் இளைய தலைமுறை உங்களது நேரத்தை ஆக்க பூர்வமாக செயல்படுத்துங்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு நம்பிக்கை தரும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் நிஹால் பேசியதாவது…
ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார். அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
விஜயானந்த் திரைப்படம் டிசம்பர் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகிறது.