“கும்மடி நரசைய்யா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும், யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக,  பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.

இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இந்தப் படத்தில் கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய பரமேஷ்வர் ஹிவ்ராலே, இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம், தயாரிப்பாளர் N.சுரேஷ் ரெட்டியின் (NSR) முதல் தயாரிப்பாகும்.

படக்குழுவினரால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், டாக்டர் சிவராஜ்குமார் எளிமையான அதே நேரம், வலிமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கண்கண்ணாடி அணிந்து, வெள்ளை குர்தா – பைஜாமா மற்றும் தோளில் சிவப்பு துண்டு போர்த்திய நிலையில், சைக்கிளை தள்ளிச்செலும் காட்சியில், பின்னணியில் சட்டமன்றம் தெரிகிறது. சைக்கிளில் தொங்கும் நெல் மற்றும் சுத்தியல் சின்னம் கொண்ட சிவப்புக் கொடி, அவரது இடதுசாரி சிந்தனையையும், அரசியலின் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. கும்மடி நரசைய்யாவின் பணிவு மற்றும் உள்மன வலிமையை சிவராஜ்குமார் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

கான்சப்ட்  வீடியோவில், நாயகப் பெருமையோ ஆடம்பரமோ இன்றி சைக்கிளில் சட்டமன்றத்திற்குள் நுழைவது எளிமையாக காட்டப்படுகிறது. பின்பக்க இருக்கையில் சில புத்தகங்கள் காட்டப்பட்டிருக்கும் அந்தக் காட்சி, அவரின் அறிவார்ந்த தன்மையையும், நிலைகுலையாத பணிவையும் அழகாக வெளிப்படுத்துகிறது.

இயக்குநர் பரமேஷ்வர் ஹிவ்ராலேவின் கதை சொல்லும் நேர்மையும், உண்மைத்தன்மையும், ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுகிறது. இந்த வாழ்க்கை வரலாறு படத்தை, மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உருவாக்கியிருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இப்படத்தில் தொழில்நுட்பக் குழுவும் மிக வலுவாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சதீஷ் முத்யலா, கிராமியத்தின் பசுமையையும், உண்மையையும் துல்லியமாகப் படம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் சுரேஷ் பாபிலி, கதையின் உணர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். எடிட்டிங் செய்துள்ள சத்யா கிதுதுரி, இந்த வீடியோவை, வெகு சுருக்கமாகவும், தாக்கத்துடனும் கொண்டுவந்துள்ளார். அன்றைய காலகட்டத்தை முழுமையாக மீண்டும் உருவாக்கியுள்ள தயாரிப்பு வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது.

இந்த பான்-இந்தியா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ‘கும்மடி நரசைய்யா’ திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. நேர்மை, தியாகம், மக்களுக்கான சேவை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தக் கதை, எல்லா மாநில மற்றும் எல்லா மொழி பார்வையாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்மடி நரசைய்யாவின் வாழ்க்கை ஒரு அரசியல் கதை மட்டுமல்ல — அது ஒரு மனிதனின் ஆழமான பயணம். இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படம், மக்களுக்காக வாழ்ந்த ஒரு மனிதனின் மரியாதைக்குரிய வாழ்க்கையை, திரையில் கொண்டுவரும் ஒரு நெகிழ்ச்சியான கலைவிழாவாக அமையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button