யாஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு !
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) தலைப்பிடப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக்-எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் என எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது.
தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல ஊகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
“டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) என்ற தலைப்பை வெளிப்படுத்தும் வீடியோ, பார்வையாளர்களை தீவிரமான ஒரு படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்லும் என்பதை உறுதியளிப்பதுடன், வெளியீட்டுத் தேதியையும் அறிவித்து, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் K நாராயணா கூறுகையில்.., எங்களின் மிகப்பெருமையான படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யாஷ் மற்றும் கீது இருவரும் ரசிகர்களை மகிழ்விக்கும் ஆக்சனுடன் ஒரு மிகச்சிறந்த படைப்பாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால், இப்படத்தை அறிவிக்க சிறிது காலதாமதாமானது. நாங்கள் தயாரிக்கும் இந்த அற்புதமான மற்றும் பிரம்மாண்டமான படத்தை உலகத்திற்கு காட்டுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
படத்தைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கீது மோகன்தாஸ், ”எனது கதை சொல்லல் பாணியில் நான் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். எனது முந்தைய படங்களான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகியவை சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எனது நாட்டில் எனது சொந்த பார்வையாளர்களை திருப்திபடுத்தி வெற்றிப்படம் தர ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த திரைப்படம். இந்த படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும், இந்தப்படத்திற்காக யாஷுடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யாஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தை கீது மோகன்தாஸ் எழுதி இயக்குகிறார், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.