“ப்ளூ ஸ்டார்” படம் மூலம் பார்வையாளர்களை கவர இருக்கும் நடிகர் பிரித்வி !

நடிகர் பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் மற்றும் சினிமா என இரண்டின் மீதும் தனக்குள்ள காதலை ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஜனவரி 25, 2024 அன்று வெளியாகும் இத்திரைப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கிய ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்க, இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் பேனரில் வழங்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ஏற்கனவே இளைஞர்களுக்குப் பிடித்தமானதாக மாறியிருக்கிறது.

1990 களின் பிற்பகுதியில் அரக்கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கதை, விளையாட்டின் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் கிரிக்கெட்டை விரும்பி நேசிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. போட்டிகள், காதல் மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

படத்தில் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவன் சாம் கதாபாத்திரத்தில் நடிப்பது பிரித்விக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. அவர் நிஜ வாழ்க்கையில் ஒரு அனுபவமிக்க விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். மேலும் டிவிஷன்-லெவல் போட்டிகள் மற்றும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் பந்துவீச்சு (Bowling) என்ற புதிய சவாலைக் கொடுத்தது. இதுகுறித்து பிரித்வி கூறும்போது, “எனது வேகமான பந்துவீச்சு நுட்பத்தை முழுமையாக்குவதற்கு நான் விரிவாக பயிற்சி பெற்றேன். எனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய, மணிக்கணக்கில் நெட்டில் பயிற்சி பெற்றேன். ஒரு கதாபாத்திரத்திற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகத் தயாரானேன் என்றால் அது இதுதான்!” என்றார்.

இந்த விளையாட்டுப் பயிற்சில் உடல் ரீதியாகவும் பிரித்வி மாற்றங்களைச் சந்தித்தார். அர்ப்பணிப்புள்ள உடற்பயிற்சி மற்றும் சரியான ஊட்டச்சத்தின் மூலம் இரண்டே மாதங்களில் 12 கிலோ எடையைக் குறைத்தார். படத்தில் அவரது 90’ஸ் கிட் கதாபாத்திரத்திற்காக இன்னும் இளமையான தோற்றத்திற்கு மாறினார். படத்தில் இவருக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.

படம் குறித்து பிரித்வி மேலும் கூறும்போது, “கிரிக்கெட்டை ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைவரையும் கவரும் ஒரு தனித்துவமான படமாக ‘ப்ளூ ஸ்டார்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் கதை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. சாம் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கணேஷ் மூர்த்தி மற்றும் லெமன் லீஃப் கிரியேஷன்ஸின் ஜி சௌந்தர்யா மற்றும் பா. இரஞ்சித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பெரிய திரையில் பார்வையாளர்களுடன் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை எந்த அளவுக்கு ரசித்தேனோ, அதுபோலவே பார்வையாளர்களும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button