தமிழ் சினிமாவில் பன்முக தன்மை கொண்ட ஆளுமை இயக்குநர் துரை
சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், கே.விஜயன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ராஜேஷ், ஆகிய பிரபலமான நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருந்தாலும் திரையுலகில் பசி துரையாக வே அவர் அடையாளப்படுத்தப்பட்டார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, பெண்மையின் மேன்மையையும், பெருமைகளையும் பிரதான கதை கருவாக கொண்டிருக்கும் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள். திரைப்பட இயக்குநர்களுக்கு இவரது இயக்கத்தில் வெளியான பசி, அவளும் பெண் தானே, ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள், ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம் போன்ற படங்கள் பாடமாகவே பார்க்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது. திரைக்கதை என்பது மக்களின் வாழ்க்கையில் இருந்தே எனக்கு கிடைத்தது என கூறிய துரை பசி திரைப்படத்திற்கான ஒருவரிக்கதை கடைசி பேருந்தை தவறவிட்டதால் ரித்க்ஷாவில் வீடு சென்ற போது ரிக்க்ஷாகாரர் கூவம் கரையோரம் வாழும் மக்கள் படும் துயரங்களை கூறியதில் இருந்து உருவானது என கூறியுள்ளார்.
பசி சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சிறந்த இயக்குனர், திரைப்படம், நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம். ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை.
அவரை பற்றிய தகவல்கள்:
இயக்குநர் துரையின் சொந்த ஊர் பாளையங்கோட்டை. 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் செல்லதுரை. இவரது பெற்றோர் சாமுவேல் ஜேக்கப் – ராஜம்மாள்.
துரை பாளையங்கோட்டையில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு அவரது தந்தைக்கு ஆவடியில் உள்ள ஆர்டினன்ஸ் தொழிற்சாலையில் வேலை கிடைக்க குடும்பம் ஆவடிக்கு இடம்பெயர்ந்து. தாய் ராஜாம்பாள் அம்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.
சினிமா பார்ப்பது, அதுபற்றி விவாதிப்பது. கதை எழுதுவது என்று துரை ஆர்வம் கொண்டிருந்தார். இதனால்
பத்தாம் வகுப்புக்கு மேல் அவர் படிக்கவில்லை.
மகன் சினிமா பைத்தியமாக இருக்கிறானே என்று ஆத்திரப்பட்ட அவரது தந்தை, ஒரு நாள் அவரை கண்டித்தார். அதனால், கோபத்துடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டுக்கு துரை சென்றார். அங்கிருந்தபடி சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்ய தொடங்கினார்.
துரையின் சகோதரி மருதநாயகம் என்பவரின் மருத்துவமனையில் பணிபுரிந்தார் அங்கு டாக்டரை பார்க்க அப்போதைய பிரபல இயக்குநர் யோகானந்த் வந்து செல்வதுண்டு. அவரைப் பற்றி தெரிந்து கொண்ட துரையின் சகோதரி, தனது தம்பியின் சினிமா ஆர்வத்தை அவரிடம் தெரிவித்திருக்கிறார்.
முதலில் சினிமா பற்றிய புரிதல் உன் தம்பிக்கு தேவை. அதை வளர்த்துக் கொள்ளட்டும் என்று ரேவதி ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் எஞ்சினியரின் உதவியாளராக துரையை சேர்த்துவிட்டார். அங்கு வேலை பார்த்துக் கொண்டே அங்கு வரும் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், நடிகர்கள் என எல்லோரிடமும் நன்றாக பழகி நட்பை வளர்த்துக் கொண்டார் துரை.
அதில் கல்யாண்குமாரின் நட்பு அடுத்த கட்டத்துக்கு செல்ல காரணமாக அமைந்தது. அவர்தான் துரையை ஜி.வி.ஐயர் என்கிற இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
கல்யாண் குமார் மூலமாக தமிழ் மட்டுமல்லாது கன்னட படங்களிலும் பணியாற்றும் வாய்ப்பு துரைக்கு கிடைத்தது. இதனால், கன்னட மொழியும் நன்கு கற்றுக் கொண்டார். கன்னடத்தில் பணிபுரியும்போது அன்றையகன்னட முன்னணி நடிகர் ராஜ்குமாரின் நூறாவது படமான ‘பாக்கியத பாகலு’ படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு துரைக்கு கிடைத்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து துரைக்கு நல்ல பெயரை பெற்று தந்தது .
நடிகை பண்டரிபாய் நடிக்கும் படங்களுக்கும் துரை கதை எழுதி இருக்கிறார். இதனால், பண்டரிபாய், அவரது கணவர் ஆகியோரின் நட்பு அவருக்கு இருந்தது. அவர்கள் தமிழில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த போது, அந்தப் படத்தில் துரைக்கு வாய்ப்பு கொடுத்து இயக்குனராக அறிமுகப்படுத்தினார்கள். முத்துராமன், சுமித்ரா நடித்த அந்தப் படம்தான், ‘அவளும் பெண் தானே’. ஒரு விலைமாது பற்றிய அந்த கதையில் நாயகியாக சுமித்ராவை அறிமுகப்படுத்தினார்.
1974 ஆம் ஆண்டு இந்தப்படம் துரைக்கு தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்க காரணமானது. இவருடைய படங்களில் பெண்களை பெருமைப்படுத்துவார். பெண்களின் கஷ்ட, நஷ்டங்களை உணர வைப்பார். அந்தப் படங்கள் இயல்பான படங்களாக அமைந்திருக்கும்.
இவர் கதை எழுத குளுகுளு பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் தேடிப்போக மாட்டார். கடற்கரையில் அமர்ந்து கதை எழுதுவது அவருக்கு பிடிக்கும். நேரம் போவதே தெரியாமல் கதை எழுதுவார். அப்படி ஒருமுறை கதை எழுதி முடித்த பிறகு கடைசி பஸ் போய்விட்டதை அறிந்தார். அதன் பிறகு ரிக்க்ஷா பிடித்து வீட்டுக்கு திரும்பினார். அந்த ரிக்க்ஷாவில் வரும்போது ரிக்க்ஷாகாரரிடம் பேசிக்கொண்டு வந்தார். அவர் சொன்ன தகவல்களை வைத்து ‘பசி’ படத்தின் கதையை உருவாக்கினார்.
முந்தைய படமான ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படத்தில் நடித்த ஷோபாவை நடிக்க வைத்து ‘பசி’ படத்தை இயக்கினார். அந்தப் படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.
மேலும் அந்தப் படத்தில் நடித்த ஷோபாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மத்திய, மாநில அரசுகளின் சிறந்த படத்துக்கான விருது தயாரிப்பாளருக்கும் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் டெல்லி கணேசனுக்கும் கிடைக்க காரணமாக இருந்தது.
அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த ‘நீயா’, ‘மரியா மை டார்லிங்’ படங்களை இயக்கினார். இதில் ‘நீயா’ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து நாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘எங்க வாத்தியார்’ என்கிற படத்தையும் இயக்கினார்.
மோகன் நடித்த ‘கிளிஞ்சல்கள்’ படத்தை இயக்கி, அந்தப் படத்தின் மூலம் பூர்ணிமா ஜெயராமை தமிழில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ‘கிளிஞ்சல்கள்’ படத்தை இந்தியில் இயக்கி இந்தி திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குநர் துரை, ‘பசி’ படத்தை இந்தியில் இயக்கி-தயாரித்து, தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். அடுத்து சிவாஜி கணேசன் நடித்த ‘துணை’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார். மலையாளத்தில் பூர்ணிமா ஜெயராம் நடித்த ‘வெளிச்சம் விதறுன்ன பெண்குட்டி’ படத்தை இயக்கினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 46 படங்களை இயக்கி இருக்கும் துரை, தமிழில் பல படங்களை தயாரித்துள்ளார். அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. பிலிம்பர் பத்திரிகை சிறந்த இயக்குனருக்கான விருது ‘பசி’ படத்திற்காக வழங்கியது.
தேசிய திரைப்பட விருது விழா கமிட்டியில் உறுப்பினராகவும் இருந்துள்ள இயக்குநர் துரை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர், பதவிகளையும் வகித்திருக்கிறார்.
திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார் அவருக்கு வயது 84.