அஜீத்குமார் நடிக்க வேண்டிய தலைப்பில் அருண் விஜய்
தமிழ்த் திரையுலகில் தொடக்கம் முதலே வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனம் தனது மூன்றாவது படத்தை ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது.
தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் ரெட்டதல அவரது 36 ஆவது படமாகத் தயாராகிறது. இப்படத்தை, ‘மான் கராத்தே’, கெத்து படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.
இப்படத்தில், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.அன்பறிவு மற்றும் பிரபு ஆகியோர் இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார்.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, அந்நிறுவன தலைமைத் திட்ட இயக்குநர் டாக்டர் எம்.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்கிறார். தமிழ்த் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா, படக் குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள ஏப்ரல் 4 அன்று நடைபெற்றது. தொடக்கவிழாவில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.
இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அப்போது சொல்லியிருந்தனர்.
அதன்படி அப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை ஏப்ரல் 23/2024 அன்று மாலை சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் ரெட்ட தல என்றுஅதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பெயர் பல ஆண்டுகளுக்கு முன்னால், தீனா படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கவிருந்த படத்துக்கு வைக்கப்படவிருந்த பெயர். அப்படம் நடக்கவில்லை. அதனால், தன்னுடைய சிஷ்யர் இயக்கும் இந்தப்படத்துக்கு தலைப்பை கேட்டவுடன் கொடுத்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அஜீத் குமாருக்கு அமையாத அந்தப் பெயர் அருண்விஜய்க்கு அமைந்திருக்கிறது.