புதுமைகள் இல்லாத ரசவாதி படத்தின் முன்னோட்டம்
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘மௌன குரு’, ‘மகாமுனி’ படங்களுக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கும் படத்துக்கு ‘ரசவாதி – The Alchemist’ என தலைப்பிடப்பட்டுள்ளது. க்ரைம் – ரொமான்டிக்-&ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? :
வசனங்களில்லாமல் வெறும் பின்னணி இசையுடன் கடக்கிறது ட்ரெய்லர். இறுதியில் மட்டும், “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு சொல்லி கொடுத்திருக்காங்களா? சண்டையில சாவுறது தான் வீரம்” என்ற வசனத்தை பேசுகிறார் அர்ஜுன் தாஸ். பின்னணி இசையில் ஈர்க்கிறார் தமன். பெரும்பாலும் காதல் காட்சிகளாக நகரும் ட்ரெய்லரில் இடையிடையே சண்டைக் காட்சிகள் வந்து செல்கின்றன. அர்ஜுன் தாஸ், சிறையில் இருப்பதாக காட்டப்படுகிறது. படத்தின் கதையை கணிக்க முடியாமல் வெட்டப்பட்டிருக்கும் ட்ரெய்லரில் புதுமை தென்படவில்லை. படம் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.