தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இயக்குநர் மங்கை அரிராஜன் பதவியேற்பு !
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் மங்கை அரிராஜன். இவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின், நிர்வாகக்குழு உறுப்பினராக தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் மங்கை அரிராஜன், தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் ஐஏஎஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
மங்கை அரிராஜன் ஏற்கனவே தமிழ்நாடு திரைப்படத் துறையினர் நலவாரிய நிர்வாகக் குழுவில், சின்னத்திரை கலைஞர்கள் விருது தேர்வுக்குழு உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு வருவதை தமிழக அரசு கருத்தில் கொண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மங்கை அரிராஜனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.