சமுத்திரக்கனி யின் “திரு மாணிக்கம்” படத்தின் திரைவிமர்சனம்
GPRK சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “திரு மாணிக்கம்”.
கதைப்படி… தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளியில் மாணிக்கம் ( சமுத்திரக்கனி ), சுமதி ( அனன்யா ) தம்பதியர் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மாணிக்கத்தின் இரண்டாவது மகளுக்கு சரியாக பேச்சு வராததால் சிகிச்சை அளித்தும், பேச்சுப் பயிற்சி கொடுத்தும் சரியாகத காரணத்தால் அறுவைச் சிகிச்சை செய்ய சில லட்சங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாணிக்கம் குமுளி பேருந்து நிலையத்தில், வாடகைக்கு கடையை எடுத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடையை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் கூற, என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மாதவப்பெருமாள் ( பாரதிராஜா ) மாணிக்கத்தின் லாட்டரி கடையில், ஓனம் பம்பர் சிறப்பு லாட்டரி சீட்டினை வாங்கிக்கொண்டு, பரிசு விழுந்தால், தனது மகளுக்கு வரதட்சணை கொடுக்க முடியாததால், சம்பந்தி வீட்டாரின் ஏளனமாகப் பேச்சு, மனைவிக்கு ( வடிவுக்கரசி ) மருத்துவச் செலவு, ஓனம் பண்டிகை செலவு என இவை அனைத்தையும் தீர்த்து விடலாம் என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
பின்னர் லாட்டரி சீட்டுக்கான பணம் இல்லாததால், பணம் கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்வதாக கூறி, மாணிக்கத்திடம் தனியாக எடுத்து வைக்குமாறு கொடுத்துவிட்டு செல்கிறார்.
பணம் கொடுக்காமல் பெரியவர் எடுத்துவைத்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரைக் கோடி பரிசு விழ, அதனை அவரிடம் ஒப்படைக்க மாணிக்கம் கிளம்பிச் செல்கிறார். இதனையறிந்த அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், குடும்ப கஷ்டத்தை கூறி, மாணிக்கத்திடம் உள்ள லாட்டரிச் சீட்டினை பிடுங்க முயற்சிக்கின்றனர். பணம் கொடுக்காவிட்டாலும், அவரது நம்பிக்கையை வீணடிக்க விரும்பாமல், பெரியவரைத் தேடி செல்கிறார் மாணிக்கம்.
மாணிக்கத்தின் நேர்மை வென்றதா ? குடும்ப உறவுகளின் முயற்சி வென்றதா ? என்பது மீதிக்கதை…
பொறுப்பான கணவன், பாசமுள்ள தந்தை, நடத்தையில் நேர்மை என தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. அவரது மனைவியாக அனன்யா, இளவரசு, குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நாசர், கருணாகரன் உள்ளிட்டோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் தம்பி ராமையாவின் கதாப்பாத்திரம் கதையோடு கனெக்ட் ஆகாமல், எரிச்சல் ஏற்படும் விதமாகவே அமைந்துள்ளது.
இதே கதையம்சம் கொண்ட படம் ஏற்கனவே பம்பர் என்கிற பெயரில் வெளிவந்துள்ள நிலையில், அதே கதையை சில மாற்றங்கள் செய்து, இயக்குநர் திரைக்கதை அமைத்துள்ளாரோ என்கிற சந்தேகம் எழுகிறது !