“லாரா” படத்தின் திரைவிமர்சனம்
கார்த்திகேசன் தயாரிப்பில்,மணி மூர்த்தி இயக்கத்தில், அசோக்குமார், கார்த்திகேசன், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில், வெளிவந்துள்ள படம் “லாரா”.
கதைப்படி… காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு, ஒரு பெண்ணின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக் கிடப்பதாக தகவல் வருகிறது.
அந்த சமயத்தில் லாரன்ஸ் என்பவன் தனது மனைவி ஸ்டெல்லாவை காணவில்லை என, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறான். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடிக்கடி வந்து குறைப்பட்டுக் கொள்கிறான். இந்நிலையில்தான் அந்தச் சடலம் கிடைக்கிறது. அதை இனம் காண முடியாமல் முகம் சிதைவுற்று, உடலில் சில பாகங்கள் சேமடைந்த நிலையில் இருக்கிறது. அதைப் பார்த்த லாரன்ஸ் தனது மனைவி அதுவல்ல என்கிறான். ஆனால் தன் மனைவியை அவனே கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்று ஒரு மர்ம தொலைபேசி காவல் நிலையத்திற்கு வருகிறது.
லாரன்ஸை சந்தேகித்த போலீஸ் அவனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது. அவன் மர்மமாகத் தெரிகிறான். அவனுக்குள் ஏதோ ரகசியம் ஒளிந்து இருப்பதாக போலீஸ் சந்தேகப் படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விசாரணையை வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் செல்கிறது. அப்படி போகும் வழியில் தோண்டத் தோண்ட மர்மங்கள் தென்படுகிறது. ஹவாலா பணம் மோசடி செய்பவர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள், அவர்களைக் கொடுமைப்படுத்தப்படும் மர்ம மனிதர்கள், லாராவின் காதல் கதை, ஆதரவற்றோர் இல்லம், ஆயுதங்கள் தயாரிப்பு என்று கதை கிளைக் கதைகளாகப் பிரிகிறது. பரபரப்பாக படம் போய்க் கொண்டிருக்கும் போது லாராவின் காதல் கதை அத்தியாயம் விரிகிறது. அந்தக் காதல் கதைக்கும் இந்த கொலை கதைக்கும் என்ன தொடர்பு ?
போலீசின் சந்தேக வளையத்தில் உள்ளூர் கவுன்சிலர் வருகிறார், அவருக்கு எம்எல்ஏ ஆதரவாக இருக்கிறார். போலீஸ் சந்தேகப்படும் ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டால் ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிறது. போலீஸ் விழிபிதுங்கி நிற்கிறது. ஒரு கட்டத்தில் போலீஸின் அத்தனை சந்தேகங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு வேறொரு திருப்பம் நிகழ்கிறது. அது என்ன என்பது மீதிக்கதை.
நாயகனாக அசோக்குமார் குறைவான காட்சிகளில் வந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் காவல் ஆய்வாளர் காதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் கார்த்திகேசன், நாயகி அனுஷ்ரேயா ராஜன் ஆகிய இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.