“நிறம் மாறும் உலகில்” படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு !

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி மார்ச் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B  இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் – தினேஷ் – சுபேந்தர் – ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார். இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் ‘பிக் பாஸ்’ முத்துக்குமரன், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் பாலா சீதாராமன் வரவேற்று பேசுகையில், திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞராக அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்று வாய்ப்பு தேடிய போதும் கலைத்தாய் எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என  எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘நிறம் மாறும் உலகில்’ எனும் இப்படத்தை தயாரித்திருக்கிறோம். இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரிட்டோவையும் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.  நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருக்கிறோம். ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம் மார்ச் 7ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் தேவ்பிரகாஷ் பேசுகையில், ‘இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கலைஞர்களுக்கும் சிறப்பு என்னவென்றால் அவர்களுடைய முதல் திரைப்படம். என்னுடைய முதல் திரைப்படமாக ‘நிறம் மாறும் உலகில்’ அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இதில் நடித்திருக்கும் பாரதிராஜா, ரியோ, சாண்டி, நட்டி  உள்ளிட்ட பலருக்கும் இசையமைப்பேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனை சாத்தியப்படுத்திய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னிடம் இருக்கும் இசைத் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்திய நடிகர் ரியோ ராஜுக்கு நன்றி. இயக்குநர் பிரிட்டோ என்னுடைய நண்பர். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது அவரிடம் சில இசையமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கூறிக் கொண்டே இருந்தேன். அனைத்தையும் கேட்டுவிட்டு, இறுதியில் ‘நீ தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்’ என சொன்னார். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஜீவா சுப்பிரமணியம் பேசுகையில், இது என்னுடைய 25 ஆவது படம். இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பிரிட்டோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் போது எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எமக்கும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

இந்தத் திரைப்படம் சொல்ல முடியாத ஒரு ரணத்தை சொல்ல முயற்சிக்கிறது. அது என்ன? என்பதை மார்ச் 7 ஆம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் பிரிட்டோ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஆதிரா பேசுகையில், இந்தப் படத்தில் நான் ரியோ ராஜின் தாயார் பரிமளம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பிரிட்டோவின் அன்பிற்காக அனைத்து நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பொறுமையுடன் அனைவரையும் மதித்து நடந்து கொண்டார். இதற்காகவே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது என்றார்.

நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில், இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் மூலமாக கிடைத்தது. இந்தப் படத்தில் என் மகள் லவ்லின் நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக நடிக்கிறீர்களா? என கேட்டார்கள். இந்தப் படத்தில் நானும், என் மகளும் நடித்திருக்கிறோம். இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக பார்த்த பல விசயங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது என்றார்.

தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் தனஞ்ஜெயன் பேசுகையில், இந்தப் படத்தின் முன்னோட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக நட்டி நட்ராஜ் பின்னணி குரல் கம்பீரமாகவும், புது வடிவத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் அவர் காந்த குரலில் அட்டகாசமாக கதையை சொல்லி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ஏதாவது ஒரு விசயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அது இதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நட்டி நட்ராஜ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜுக்கும் நன்றி. சாண்டி மாஸ்டர் நடனத்தில் மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிப்பிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘மதிமாறன்’ எனும் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகை காவ்யா அறிவுமணி பேசுகையில், இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆம்பூர் எனும் ஊரிலிருந்து நன்றாக படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசு பேருந்தில் அந்தப் பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தை பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கிறார். அந்த நகைக்கடை விளம்பரத்தை பார்த்த பிறகு, நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது? என அந்தப் பெண் நினைத்தாள். அதன் பிறகு அதற்காக அந்தப் பெண் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு குறும்படங்கள், பைலட் படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்.. என நடித்து ரசிகர்களின் கவனத்தையும், அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான்.

முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தப் படத்திற்கு தேர்வு செய்யும்போது ‘இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும் என இயக்குநர் வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்தார் இயக்குநர் பிரிட்டோ. இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.

‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் பேசுகையில், இசை வெளியீட்டு விழா என்று சொன்னார்கள். இங்கு இசை வெளியீட்டு மாநாடாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கு ஏற்படுகிறது என்றால்.. இப்படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகர்களின் பட்டியலை பார்க்கும்போது ஏற்படுகிறது. பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், லிஸி ஆண்டனி.. என  நீளும் பட்டியலே இதற்கு சாட்சி. ஒரு படத்தில் கதை நாயகர்கள் இருப்பார்கள் கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற திரைப்படமாக இது இருக்கிறது. இதனை உருவாக்கிய இயக்குநர் பிரிட்டோவின் ஆளுமையை நினைத்து பிரமிக்கிறேன். இந்த கதையில் எப்படி பிரபலங்கள் நிரம்பி வழிகிறார்களோ… அதே போல் இப்படம் வெளியான பிறகு திரையரங்கிலும் ரசிகர்கள் நிரம்பி வழிய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் கேத்ரின் ஷோபா பேசுகையில், நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த குழுவினர் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் ஏழாம் தேதி படம் வெளியாகும் போது திரையரங்குகளில் வருகை தந்து பார்த்த பிறகு அனைவருக்கும் புரியும். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நான் இந்த திரைப்படத்திற்காக பிரபலமான நட்சத்திரங்கள் வேண்டும் என கேட்ட போது எந்தவித தயக்கமும் இல்லாமல் என் அனுபவத்தை பற்றி கூட கேள்வி கேட்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள். முதலில் தயங்கினாலும் பிறகு பணிகள் நடைபெற நடைபெற என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது.

எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமாக பாரதிராஜாவை சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு மனதார பாராட்டினார். வயதான தம்பதிகளை கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் உருவாக்கி கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய் என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்த படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்டி நட்ராஜ் இந்தப் படத்திற்காக பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். மும்பை பின்னணியாக கொண்ட பகுதியில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை பற்றி நான் இப்போது முழுமையாக விவரிக்க இயலாது. நான் கேட்டுக் கொண்டதற்காகவே முன்னோட்டத்திற்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அதுவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரியோ என் நண்பன். அவருடன் இன்றும் இணைந்து பயணிக்கிறேன். இப்படத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘லியோ’விற்கு பிறகு சாண்டி மாஸ்டரை இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக காண்பீர்கள். உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதை நரேட்டிவ் ஸ்டோரி. யோகி பாபுவில் தொடங்கி வித்தியாசமான உச்சகட்ட காட்சி வரை பயணிக்கும். இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும்.. இந்த கதை அம்மாவை பற்றிய கதை என்பதால் தான்.. அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மாவுடனான  கனெக்சனை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்த படத்தை ரசிகர்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியை தேர்வு செய்தோம்.  இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.

நடிகர் சாண்டி மாஸ்டர் பேசுகையில், நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன விதமும், கதையும் நன்றாக இருந்தது. ஏனெனில் ‘லியோ’விற்கு பிறகு என்னை தொடர்பு கொள்ளும் இயக்குநர்கள் அனைவரும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் அணுகினார்கள். அதனால் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டேன்.
இந்தப் படத்தின் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. எனக்கு பாடல் இருக்கிறதா? எனக் கேட்டேன் இருக்கிறது என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஐரா கிருஷ்ணன் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றார்.

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை – இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன். ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடையாளமாக நான் எதனை பார்க்கிறேன் என்றால் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தான். அதனால் இந்த படத்தில் படத்தொகுப்பாளரும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

நானும், சாண்டி மாஸ்டரும் எப்போதும் ஜாலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம். அது இந்த படத்தில் சாத்தியமாகி இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்றுவோம்.
இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்து சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது… கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய காட்சியிலும் இயக்குநர் தன் தனித்திறமையை காண்பித்து இருக்கிறார். அதை அனைவரும் ரசிப்பார்கள்.

நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்கு பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். அவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்ச் 7ஆம் தேதி ‘ நிறம் மாறும் உலகில்’ வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button