கொரோனாவை விட கொடியவரா..? நடிகர் ராதாரவி..?

நடிகர் ராதாரவி இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக சந்தோசமாக இருக்கும். அதே நேரத்தில் சலசலப்புக்கும் பஞ்சமிருக்காது. தனது உழைப்பாலும், திறமையாலும் சினிமாத்துறையில் படிப்படியாக உயர்ந்து நடிகர் ராதாரவி பல்வேறு சங்கங்களில் உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் புதிதாக துவங்கிய “வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் யூனியன் ” உறுப்பினர்களோடு இணைந்து வேலை செய்ததால் அவர்கள் சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ராதாரவி தலைமயிலான சங்கம். இதுகுறித்து டப்பிங் கலைஞர்கள் நம்மிடம் கூறுகையில்……

சினி & டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் & டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் தேர்தலில் ராதாரவி தலைமையில் ஒரு அணியாகவும், அவரை எதிர்த்து ஒரு அணியாகவும் தேர்தலில் நின்றார்கள். இறுதியில் ராதாரவி அணி வெற்றி பெற்றது. ராதாரவி அணியை எதிர்த்து போட்டியிட்ட , வாக்களித்த உறுப்பினர்கள் என பலரையும் பழிவாங்கும் எண்ணத்தோடு, சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கியது அனைவரும் அறிந்ததே! தன்னை எதிர்க்க நினைப்பவர்களை அழிக்க நினைப்பது ராதாரவியின் வாடிக்கைதான்.இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

ராதாரவியால் நீக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக “வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் யூனியன்” என்ற பெயரில் புதிய சங்கம் துவங்கியுள்ளார்கள். இவர்கள் சின்னத்திரை சங்கத்தினரிடம் தங்களுக்கும் வேலை கொடுக்குமாறு கோரிக்கை வைத்து வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுடன் ராதாரவி சங்கத்தில் இருப்பவர்களும் சிலர் இணைந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

புதிய சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களின் பணிக்கான சம்பள பணத்தை எந்தவித கமிஷனும் இல்லாமல் தாங்களே பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ராதாரவி தலைமையிலான சங்கத்தின் உறுப்பினர்களின் சம்பளத்தை சங்கம் தான் வசூல் செய்கிறது. உறுப்பினர்கள் தாங்கள் வேலை பார்க்கும் சம்பளத்தை முழுமையாக பெறுவது இல்லை. இதில் ராதாரவியின் விசுவாசிகள் வேலை பார்க்காமலே உறுப்பினர்களின் உழைப்பால் பிழைப்பு நடத்துகிறார்கள்.

புதிய சங்கத்தின் உறுப்பினர்களோடு ராதாரவி தலைமையிலான சங்கத்தின் உறுப்பினர்களும் இணைந்து பணியாற்றுவதால் நாளடைவில் இவர்களும் அவர்கள் வேலைக்கான சம்பளத்தை அவர்களே பெற்றுக்கொண்டால் நமக்கு வாருமானம் கிடைக்காது என்பதால், புதிய சங்கத்தின் உறுப்பினர்களோடு இணைந்து வேலை செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார்கள்.

ராதாரவியால் நீக்கப்பட்டவர்கள் யாரும் வேறு சங்கத்தில் சேர்ந்து வேலை பார்க்க கூடாதா?அவர்கள் குடும்பம், குழந்தைகள் பசி, பட்டினியால் இறந்தால் பரவாயில்லையா? அவர்கள் தனியாக சங்கம் துவங்கி ஏதோ ஒருசில நல்லவர்கள் கொடுக்கும் வேலையைப் பார்த்து பிழைப்பு நடத்தி தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் வாயில் மண்ணைப் போட நினைக்கிறது ராதாரவி தலைமையிலான நிர்வாகம்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சினிமாத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலையை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் நடிகர் ராதாரவியின் செயல்பாடுகள் கொரோனாவை விட கொடுமையான செயலாக இருக்கிறது என்று கூறினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button