“பேட்டில்” படத்தின் விமர்சனம்

எலைட் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, சுப்பிரமணியம் சிவா, காயத்ரி, சுருளி உள்ளிட்டோர் நடிப்பில், நாராயணன் பழனி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பேட்டில்”.
கதைப்படி.. ராப் பாடல் போட்டியில் கலந்து கொண்டு, “பேட்டில்” டைட்டிலை வெற்றி பெற வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார் ராப்பர் மணி ( அர்ஜுன் பிரபாகரன் ). இவரது செயல்பாடுகளை தனியார் பள்ளி ஆசிரியை மதி ( ஆராத்யா ) ரசிக்கிறார். பின்னர் இருவரும் காதலர்களாகிறார்கள். மணியும் ராப் இசையில் “பேட்டில்” டைட்டிலையும் வெற்றி பெறுகிறார். ரேப்பர் மணியின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது. வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தமாகிறார்.

இதற்கிடையில் மதி வேலை பார்க்கும் தனியார் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பணிபுரியும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதேபோல் மாணவ, மாணவிகளும், குறித்த நேரத்தில் பாடங்களை கற்றுத்தராததால் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு மாணவி தற்கொலை செய்து கொள்கிறார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மதி முயல, பள்ளி நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்.
ரேப்பர் மணி, மதி காதல் என்னானது ? பள்ளி நிர்வாகத்தினரின் அடாவடி செயலுக்கு தீர்வு கிடைத்ததா ? என்பது மீதிக்கதை..

தீர்க்க முடியாத சில பொது பிரச்சினைகளுக்கு, பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக குரல் கொடுப்பதால், உடனடியாக மக்களின் கவனத்தை ஈர்த்து தீர்வு காணப்படுகிறது. சரியான விஷயங்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும், பொதுமக்கள் மத்தியில் தனியார் பள்ளியில் படித்தால் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைத்தரம் உயரும் என்கிற மாயையை உடைத்தெறியும் வகையில், தனியார் பள்ளிகளின் பணம் பறிக்கும் அராஜக போக்கையும் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் இன்னும் கவணம் செலுத்தியிருக்கலாம். இறுதி காட்சியில் கலை பொழுதுபோக்கு மட்டுமல்ல ! மக்களின் இதயங்களை வருடி அரசியலை திணிக்கும் கருவியும் கூட ! என சொல்லி முடித்ததும் சிறப்பு.

ராப் பாடகராக அர்ஜுன் பிரபாகரன் சிறப்பாக நடித்திருந்தாலும் இன்னும் கவணம் செலுத்தி இருக்கலாம். ஆசிரியையாக ஆராத்யா தான் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும், திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.
அதேபோல் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



