தமிழ் சினிமா நன்றாக இருக்கிறதா ?, இல்லையா ? “செஞ்சி” படவிழாவில் பாக்யராஜ்

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளே இழுத்துக் கொள்ளும், என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வளர்ச்சியடைந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்று குடும்பம், பிள்ளைகள் என்று  பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம்  ‘செஞ்சி’. இதை  வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் தனது விருப்பத்துக் கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  ‘செஞ்சி’ என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார்.

இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது, இப்பதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது. வெற்றிகரமான மூன்றாவது நாள்,வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போடுகிறார்கள். ஒரு காலத்தில் வெற்றிகரமான 25வது நாள், 100வது நாள் ,125 வது நாள் 175 வது நாள் என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது. இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா என்று  ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா என்றெல்லாம் போய் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமா என்று பேசுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி. அப்படிப்பட்ட சூழலில் தான் இவர் இந்த  செஞ்சி படத்தை உருவாக்கி இருக்கிறார் .நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அந்தப் படத்தைப் பற்றி, தயாரிப்பாளர் பற்றி, இயக்குநர் பற்றி விசாரிப்பேன். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள். இவர் ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார்.

படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு புதைக்கப்பட்ட புதையலை, பொக்கிஷத்தைத் தேடிப் பயணம் செல்வது போல் உள்ளது. இது பார்ப்பதற்குப் புதிதாக உள்ளது. இப்போது கூட கேரளாவில் பல கோயில்கள்  திறக்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் அவ்வளவு பொக்கிஷங்கள் அங்கே இருப்பதாகப்  பேசப்படுகிறது.  படத்திற்கான முக்கிய பாத்திரத்தில் இயக்குனரே   நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய ஆள் சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய  முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள். இந்த செஞ்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

இந்த விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஷிண்டே,  இசையமைப்பாளர்கள் முத்து- கணேஷ் ,பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர்  வைத்தியநாதன், மலேசியாவில் இருந்து வந்திருந்த தயாரிப்பாளரின் மைத்துனர் டத்தோ டாக்டர் கமலநாதன் , தயாரிப்பு நிர்வாகி தில்லை நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் தினேஷ் சந்திரசேகரின் மகன் அஸ்வின் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button