சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் “சூர்யா 42” பூஜையுடன் துவங்கியது
நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா உடன் யூ.வி. கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
நடிகர் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று, ஜெய் பீம்’ மற்றும் ‘எதற்கும் துணிந்தவன்’ உட்பட சமீபத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது மகத்தான தொடர் வெற்றிகளின் மூலம் ‘ஸ்டார்’ மற்றும் ‘நடிகர்’ ஆகிய இரு களங்களிலும் தன்னை நிலைநிறுத்தி இந்தியத் திரையுலகில் தானோரு ‘அபூர்வ இனம்’ என நிரூபித்துள்ளார். சினிமா மீதான ஆர்வம், அவரது முழு அர்ப்பணிப்பு, இணையற்ற விடாமுயற்சி மற்றும் அவரது நிஜ வாழ்க்கையின் வீர உருவம் ஆகியவை பான்-இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத்தந்துள்ளன.
மேலும், அவரது திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றதுடன் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் நடிகர் சூர்யா, இன்று (ஆகஸ்ட் 24, 2022) தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.
‘சூர்யா 42’ என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது. இப்படத்தினை K.E. ஞானவேல்ராஜா, மிகப் பெரிய பான்-இந்திய வெற்றி திரைப்படங்களில் சிலவற்றைத் தயாரித்த யூ.வி. கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கின்றனர். பாக்ஸ் ஆபிஸ் கமர்ஷியல் சினிமாவின் இயக்குனர் என்ற புகழை ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் திரைப்பட இயக்குனர் சிவா, உலகளாவிய பார்வையாளர்களுக்கு மற்றொரு மெகா விருந்தை தரவுள்ளார். இப்படம் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு மாறுபட்ட படைப்பாக இருக்கும்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
சூர்யா 42 படத்தில் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அவர் சமீபத்திய பான்-இந்தியன் பிளாக்பஸ்டர் ‘புஷ்பா’ உட்பட பல சூப்பர் ஹிட் ஆல்பங்களை தந்துள்ளது குறிப்பிடதக்கது.