“21 கிராம்ஸ்” படத்திற்கு 17 சர்வதேச விருதுகள்.!
சமீபத்தில் வெளியாகும் எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது. இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் ’21 கிராம்ஸ்’.
இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் கதாநாயகனாக மோ. கணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.
இந்தப் படம் பற்றிய அனுபவத்தை இயக்குனர் யான் சசி கூறும் போது,… முழு நீளத்திரைப்படம் இயக்குவது தான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது. தாமதமாகிக் கொண்டே வந்தது. இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக்கூடிய ஒரு பைலட் பிலிம் போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக 52 நிமிடங்களில் ஓடக்கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.
நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைக் கடந்து முழுப் படமாக வடிவம் பெற்று இன்று பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதைப் திரையிட்டுக் காட்டிய போது அனைவரும் இப்படிக் கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் , சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது. அந்தத் திரைப்பட விழாவில் தான் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது .
அதேபோல தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம், அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன. 52 நிமிடங்களில் ஒரு முழு படத்திற்கான திருப்தியை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இது உருவாகி உள்ளது.
இப்படத்தில் அறிமுகமான கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது . இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள பூ ராமுவின் நடிப்பும் பேசப்படும் . நாங்கள் ஒரு புது படக் குழுவாக இருந்தாலும் கதையையும் இந்த முயற்சியையும் ஊக்கப்படுத்தும் வகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அவரது இறப்பு எங்களைப் போல் வளரும் இளம் இயக்குனர்களுக்கு பெரிய இழப்புதான்.
படத்தை முடித்து திரையிட்டுக் காட்டிய போது பலரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தன. திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் கிடைத்து வரும் விருதுகளும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எனக்கு அளித்து வருகிறது.” என்கிறார் இயக்குநர் யான் சசி.