பெப்சியின் பொதுச்செயலாளர் சண்முகம் மறைவால் படப்பிடிப்புகள் ரத்து
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளரும்,கலை இயக்குனர் சங்கத்தின் தலைவருமான திரு சண்முகம் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி தமிழ்த் திரையிலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது.
பெப்சியின் பொதுச்செயலாளராக மூன்று முறையும், பெப்சியின் பொருளாளாராக இரண்டு முறையும், கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வந்த அங்கமுத்து சண்முகம் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.இவருக்கு இறங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை நடைபெற இருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.
இவர் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். தொழிலாளர்களின் போராட்டங்கள்,சங்கங்களின் பிரச்சனைகள், படப்பிடிப்புத் தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான பேச்சுவார்த்தை, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை என பல்வேறு பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் ஏற்பட உறுதுணையாக இருந்தவர் இன்று எத்தனையோ தொழிலாளர்களை கவலையில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்.
இவருடைய தந்தை அங்கமுத்து தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், எம்ஜிஆரின் நம்பிக்கைக்குறியவராகவும் இருந்தவர். அவரும் கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். தந்தையின் வழியில் எளிமையான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த சண்முகம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர். இவருடைய மறைவுச்செய்தி அறிந்து சினிமா தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய நாற்காலி செய்தி, தமிழ்த்திரை மீடியா குழுமத்தின் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.